சிறந்த படைப்பாளியை உருவாக்கும் சொந்த அனுபவங்கள்
இலக்கியத்தின் மீது தீராக்காதல் கொண்டவர் சுப்பிரமணியம், 55. பிருந்தா சாரதி எனும் புனைப்பெயரில், கவிதை வரைகிறார். அவதாரம், தேவதை, ஆனந்தம் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். 'தித்திக்குதே' திரைப்படத்தை இயக்கிய அவர், பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2 உள்ளிட்ட தமிழ்ப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, தமிழ்த்துறை சார்பில், 'புதுக்கவிதைகளில் உத்திகளும் கட்டமைப்புகளும்,' எனும் தலைப்பில் நடந்த புதுக்கவிதை பயிலரங்கத்தில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிருந்தா சாரதி மாணவர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:இப்போதைய நம் புதுக்கவிதைகள், உலக கவிதைகளோடு, ஒப்பிடும் அளவு வளர்ந்து வருகிறது. சிறுகதை, நாவல் இலக்கியங்களில் அகில இந்திய அளவில் கவனிக்கப்படுபவையாக மாறி வருகிறது. குறிப்பாக, புத்தக கண்காட்சிகளில், தொடர்ந்து புத்தக விற்பனை அதிகரிக்கிறது. நம் கவிதை, புத்தக ரசனை வளர்வதையே இது காட்டுகிறது. சிறந்த வாசகர் - சிறந்த படைப்பாளிநல்ல ரசனை உள்ள ஒரு வாசகர், சிறந்த படைப்பாளியாக மாற முடியும். முதலில் நாம் அதிகம் படிக்க வேண்டும்; அப்போது தான் எழுத முடியும். மேடையில் பேசுவது ஒரு கலை. அது வளர வேண்டும். வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், இப்போது மேடை பேச்சுகளை நின்று கவனித்து கேட்பதில்லை. ஒன்று 'ரெக்கார்டு' செய்து கொள்கின்றனர் அல்லது 'யூ டியூப்' வாயிலாக பார்க்கின்றனர்; இது, இலக்கியமாக கவனம் பெறாது.ஈர்ப்பை ஏற்படுத்துவது தான் இலக்கியம். பொழுதுபோக்காக இலக்கிய கூட்டங்கள் நடக்கக்கூடாது. முழுமையான வாசிப்புக்குரியது தான் தீவிர இலக்கியம். மனிதனின் ஆழ்ந்த சிந்தனையில் இருந்து பிறப்பிப்பது தான் இலக்கியம் அல்லது கலை. பனை ஓலை காலகட்டமாக இருந்தாலும், அச்சடிக்கும் நடைமுறையாக இருந்தாலும் சரி, டிஜிட்டல் உலகமே வந்தாலும், செயற்கை நுண்ணறிவு கோலோச்சினாலும், மனிதன் சிந்தித்துத் தான் ஆக வேண்டும். மனிதனின் சிந்தனை, கற்பனை திறன் தான் முக்கியம். டிஜிட்டல் உலகத்தில், கவிதை உலகம் எதிர்நோக்கும் சவாலாக ஏ.ஐ., தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. இதன் வாயிலாக ரசனை மாறும். கற்பனைத்திறன் எனும் அபூர்வ முட்டைமனிதக் கற்பனைத்திறன், அபூர்வமான ஒரு முட்டை. அதில் இருந்து ஆயிரம் விதைகள் முளைக்கும்; பசியும் தீரும். ஆனால், ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் உருவாவது, ஒரு விதை; அது பயிராகும், ஆனால், பசி தீர்க்குமா என்பது தெரியாது. பசி தீராத பயிராக இலக்கியம் இருக்கக்கூடாது; கற்பனைத்திறன் மேம்பட வேண்டும்.மேலான கவிதை மற்றும் கற்பனைக்கு, உலகச் சந்தையில், கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் ஏராளம். உங்கள் சொந்த அனுபவங்கள் கூட கவிதை, கதையாகும் போது, உங்களை மேலே கொண்டு வர, சிறந்த படைப்பாளியாக்க உதவும். இவ்வாறு பிருந்தா சாரதி பேசினார். ----பிருந்தா சாரதிபனை ஓலை காலகட்டமாக இருந்தாலும், அச்சடிக்கும் நடைமுறையாக இருந்தாலும் சரி; டிஜிட்டல் உலகமே வந்தாலும், செயற்கை நுண்ணறிவு கோலோச்சினாலும், மனிதன் சிந்தித்துத் தான் ஆக வேண்டும்