உத்தமலிங்கேஸ்வரராக பொங்கு செஞ்சடை புண்ணியமூர்த்தி
பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம், நாளை நடக்க உள்ள நிலையில், அக்கோவில்களின் மகத்துவத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.சோழன், சேரன், பாண்டியன் என, மூவேந்தர்கள் திருப்பணி செய்த உத்தமலிங்கேஸ்வரர் கோவில், அபூர்வமான வெண்ணிற கற்களால் கட்டப்பட்டுள்ளது. கர்ப்பகிரஹமும், விமானமும், பெரிய தேர்போல் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. கருவறையில், அர்த்தமண்டபத்தை கடந்து, முதல் மண்டபத்தில், மிகவும் அபூர்வமான நடராஜர், சிவகாமியம்மன் மற்றும் பஞ்சலோக உற்சவமூர்த்திகள் அருளாட்சி புரிகின்றனர். நடராஜர் சிலை, வலது கால் மட்டும் நிலத்தில் ஊன்றி இருக்கும் வகையில், மற்ற இடங்கள் எங்கும் இணையாத, ஆனந்த நடராஜராக அருள்பாலிக்கிறார். முதல் முன் மண்டபம், இரண்டாவது முன் மண்டபங்கள், தலா நான்கு துாண்களுடன் காட்சியளிக்கின்றன. வசந்தமண்டபம், 20 துாண்களுடன் காட்சியளிக்கிறது. வடபுறம், தெற்குநோக்கியபடி, வள்ளி, தெய்வானையுடன் ஷண்முகர் சன்னதி உள்ளது. உட்புறம் உள்ள, 10 துாண்களில், ஆறு அடி உயர சிற்பங்கள் பிரமாண்டமாக காட்சியளிக்கின்றன.செங்கோட்டு வேலவர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர்; ஊழித்தாண்டவ கோலத்தில் சிவபெருமான், தில்லைக்காளியம்மன்; புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் மற்றும் வீரபாகு என, ஒவ்வொரு துாண்களிலும், பிரமாண்டமான வெள்ளை கல் சிற்பம் பிரமிக்க வைக்கிறது.மூலவரின் அதிகார நந்தி, சிறிய தேர்போன்ற, விமானத்துடன் கூடிய மண்டபத்தில் காட்சியளிக்கிறது. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், நந்தியம்பெருமான், நேருக்கு நேர் மூலவரை நோக்கிபடி அமர்ந்திருக்கிறார். அம்மன் கோவில் நந்தி, சற்றே தெற்கே திரும்பியபடி, ஒரு கண்ணால் அம்மனை தரிசித்தபடி அமைந்துள்ளது. மூலவர் கருவறையின் முதல் முன் மண்டபத்தில், நான்கு கால்களையும் மடக்கி நிலத்தில் அமர்ந்தது போன்ற, மற்றொரு லிங்கமும் வீற்றிருக்கிறது. கோவிலின், நுழைவாயில் கோபுர மண்டபம்,முன்புறம் ஆறு துாண்களுடனும், கோவிலின் உட்புறம் ஆறு துாண்களுடன், 12 தமிழ் மாதங்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முன்புற மண்டபத்தில் மிக பழமையான விநாயகர் மற்றும் முருகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.---உத்தமலிங்கேஸ்வரர் கோவில் துாணில் உள்ள செங்கோட்டு வேலவர் - கிருஷ்ணர் - தில்லைக்காளி - வீரபாகு - அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்கள்.