திருப்பூர்;'மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஏற்றுமதியை ஊக்குவிக்கும் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு தொகை திட்டம் அறிவிக்கப்பட்டால், திருப்பூரின் ஆடை உற்பத்தி தொழில் இரு மடங்கு வளர்ச்சி பெறும்' என, நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் உற்பத்தி சார் ஊக்கத் தொகை திட்டத்தை, கடந்த, 2020 ஏப்., மாதம் மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தில் ஜவுளி உற்பத்தி, சூரிய ஒளி மின்சாரம், பேட்டரி தயாரிப்பு உள்ளிட்ட, 14 துறைகள் இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கென, 1.97 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியது. இருப்பினும், திட்டத்தில் இணைவது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், ஒதுக்கப்பட்ட தொகையில், 1.5 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.பயன்படுத்திகொள்ளணும்!திட்டம் குறித்து, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் கூறியதாவது:திருப்பூரில் தயாரிக்கப்படும் பின்னலாடைக்கு உலக நாடுகளில் வரவேற்பு அதிகம். திருப்பூரில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களில், 21 மாநிலங்களை சேர்ந்த, 10 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில், திருப்பூரின் பங்களிப்பு, 54 சதவீதம்.ஏற்றுமதியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டம், தற்போது செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதிலும், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 300 கோடி ரூபாய் வர்த்தகம்; 300 கோடி ரூபாய் முதலீட்டில், 600 கோடி ரூபாய் வர்த்தகம் என, இரு பிரிவுகளின் கீழ் மட்டுமே உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.நாடு முழுக்க, 64 விண்ணப்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வழங்கப்பட்டிருக்கிறது. இதில், திருப்பூரில், ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே விண்ணப்பம் வழங்கி, திட்டத்தில் இணைந்தும் உள்ளது. திட்டத்தில் இணைந்த, 2வது ஆண்டு துவங்கி, நான்கு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். திட்டத்தில் இணைய விண்ணப்பம் வழங்கியதில், ம.பி., மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகமுள்ள நிலையில், '15, 25, 50 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தி செய்யும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; பருத்தி நுாலிழை ஆடை தயாரிப்புக்கும் இத்திட்டத்தை அனுமதிக்க வேண்டும்' என, தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சரும் தெரிவித்திருந்தார்.வரும், 23ம் தேதி மத்திய பட்ஜெட்டில் இதுதொடர்பான அறிவிப்பு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, அறிவிக்கப்பட்டால், திருப்பூர் தொழில்துறையினருக்கு பெரும் உதவியாக இருக்கும்; திருப்பூரின் ஆடை உற்பத்தி தொழில் இரு மடங்கு வளர்ச்சி பெறும். இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வை நிறுவனங்கள் பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகமுள்ள நிலையில், '15, 25, 50 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தி செய்யும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்க வேண்டும்