நகை வியாபாரியிடம் ரூ.1.10 கோடி பறிப்பில் திருப்பம்; டிரைவர் உட்பட 2 பேர் கைது: ரூ. 80 லட்சம் மீட்பு
திருப்பூர் : கரூர் நகை வியாபாரியிடம் போலீஸ் என கூறி, ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாயை பறித்து சென்ற வழக்கில், வியாபாரியின் டிரைவர் உட்பட, இருவரை போலீசார் கைது செய்து, 80 லட்சம் ரூபாய் மீட்டனர்.கரூர், கீழநஞ்சையை சேர்ந்தவர் வெங்கடேஷ், 60; நகை வியாபாரி. கடந்த, 4ம் தேதி மாலை கோவையில் நகை வாங்க கரூரில் இருந்து காரில் சென்றார். ஜோதிவேல், 54 என்பவர் காரை ஓட்டினார். திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சம்பந்தம்பாளையத்தில் பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று திடீரென வழிமறித்து, நான்கு பேர் தங்களை போலீஸ் என்றும், காரில் கஞ்சா கடத்தப்படுவதாக கூறியும் காரை சோதனை செய்தனர். திடீரென, வெங்கடேஷ் மற்றும் டிரைவரை தாக்கி, 1.10 கோடி ரூபாய் மற்றும் 3 மொபைல் போன்களை பறித்து சென்றனர். அவிநாசிபாளையம் போலீசார் விசாரித்தனர்.இந்த கொள்ளை தொடர்பாக, எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், காங்கயம் டி.எஸ்.பி., மாயவன் தலைமையில், நான்கு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. காரை பின்தொடர்ந்து வந்த கும்பல் தப்பிச்சென்ற வழி, மொபைல் போன் டவர் என, பல விதங்களில் விசாரணையை தொடர்ந்தனர். அதில், கார் டிரைவர் ஜோதிவேலை பிடித்து விசாரித்தனர். போலீசார் கூறியதாவது:பணத்தை பறித்து தப்பி சென்ற கார் சென்ற வழியிலுள்ள 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டோம். பணம் கொண்டு வருவது குறித்து யாருக்கு எல்லாம் தெரியும் என விசாரித்ததில், டிரைவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது மொபைல் போன்களுக்கு வந்த அனைத்து அழைப்பும்களையும் சோதனை செய்யப்பட்டது. அதில், ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு மட்டும் அன்றைய தினம் அடிக்கடி பேசியது தெரிந்தது. கோவைக்கு நகை வாங்க பெரும் தொகையுடன் அவ்வப்போது சென்று வருவது குறித்து ஜோதிவேலுக்கு தெரிந்ததால், தனது நண்பரான தியாகராஜன், 41 என்பவரிடம் கூறியுள்ளார். உடனே, பணத்தை பறிக்க, இருவரும் திட்டமிட்டனர். இதற்கான ஆட்களை தியாகராஜன் ஏற்பாடு செய்தார். அதன்பின், காரை மறித்து பணத்தை பறித்து சென்றனர். இதுதொடர்பாக, டிரைவர் ஜோதிவேல், தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், மொத்தம், ஒன்பது பேருக்கு தொடர்பு உள்ளது. விரைவில், அனைவரையும் கைது செய்வோம். இவ்வாறு, அவர்கள் கூறினர். நாடகமாடிய டிரைவர்
கைது செய்யப்பட்டுள்ள டிரைவர் ஜோதிவேல், கடந்த, நான்கு ஆண்டுகளாக வெங்கடேஷூக்கு கார் ஓட்டி வருகிறார். நகை வாங்க செல்லும் போது இவர் தான் சென்று வருகிறார். பெரியளவில் தொகை கொண்டு செல்வது குறித்து முன்பே தெரிந்தது. இதனை நண்பரிடம் தெரியப்படுத்தி பறிக்க திட்டமிட்டனர். வியாபாரிக்கு சந்தேகம் வராத படி, பணம் பறிப்பு முதல், பின் உறவினர் வீட்டுக்கு கோவைக்கு சென்று, பின் போலீசில் புகார் கொடுக்கும் வரை உடன் இருந்தார். போலீசின் விசாரணை, நடவடிக்கையை உடன் இருந்து கண்காணித்து வந்தார்.