திருப்பூர் : ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த, சாமளாபும் ஸ்ரீ பூமிநீளா சமேத வரதராஜப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை (12ம் தேதி) நடக்கிறது.திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம், நொய்யல் கரையோரம் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பூமிநீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. அனுமன், விஷ்வக்சேனர், ராமானுஜர், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், தன்வந்திரி, லட்சுமி ஹயக்கிரீவர், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன; கருடாழ்வார் கரம்குவித்து சேவித்தபடி அருள்பாலிக்கிறார்.இத்தலத்தில் உள்ள நம்பெருமாள், அருளாளப்பெருமாள் என்று அழைக்கப்பட்டதும், வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடியதும், மிளகு மற்றும் உப்பு வியாபாரிகளுக்கு கோவில் வரி விதிக்கப்பட்டதும், இங்குள்ள, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது. கடந்த, 1994ல் கோவில் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடந்தது. மீண்டும் திருப்பணிகள் செய்து, நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.நேற்று மாலை முதல்கால யாகவேள்வி பூஜைகள் துவங்கியது. இன்று, இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகளும், நாளை, காலை, 5:00 மணி முதல், நான்கு மற்றும் ஐந்தாம் கால பூஜைகளும் நடக்கின்றன. காலை, 6:00 முதல், 7:00 மணிக்குள், கும்பாபிஷேகமும், தொடர்ந்து, தசதரிசனமும் நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. ஸ்ரீமத் அஹோபிலமடம் ராஜகோபாலன் அருளாசி வழங்க உள்ளார். கோவில் பஜனைக்குழு சார்பில், சிறப்பு நாம சங்கீர்த்தனம் மற்றும் கிராமிய கலை நிழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, விழா குழுவினரும், பொதுமக்களும் செய்து வருகின்றனர்.