திருப்பூர்:திருப்பூர், தாராபுரம் ரோட்டை சேர்ந்த, 26 வயது இளம்பெண், தன் கணவர் மற்றும் குழந்தையுடன் வசிக்கிறார். நேற்று அதிகாலை, 1:00 மணியளவில் கோவில்வழி அருகே குழந்தையுடன் நடந்து சென்றார். ரோந்து வந்த நல்லுார் எஸ்.ஐ., பரஞ்ஜோதி, இளம்பெண்ணிடம் விசாரித்தார். 'எனது கணவரை போலீசார் அழைத்துச் சென்றனர். வீட்டில் இருந்த மொபைல் போனையும் எடுத்துச் சென்றனர்' என, அப்பெண் கூறினார்.இத்தகவல் போலீஸ் கமிஷனர் லட்சுமிக்கு தெரியவர, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. பெருமாநல்லுாரில் உள்ள ஒரு வீட்டில், அப்பெண்ணின் கணவரை அடைத்து வைத்திருப்பது தெரிந்தது.போலீசார் கூறியதாவது:நள்ளிரவு பெண் வீட்டுக்கு முதலில் மூவரும், தொடர்ந்து போலீஸ் சீருடையில் மூவரும் சென்றனர். இவர்கள் வீட்டில் இருந்த இரு மொபைல் போன்களை எடுத்துக்கொண்டு, 'ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு, கணவரை மீட்டுக் கொள்' என்று மிரட்டி, பெண்ணின் கணவரை அழைத்துச் சென்றனர்.பெருமாநல்லுாரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் கணவர் உட்பட மூன்று பேரை மீட்டோம். கடத்தலில் தொடர்புடைய திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர்கள் கோபால்ராஜ், 33, சோமசுந்தரம், 33, நீலகிரி மாவட்டம், சோலுார் மட்டம் ஸ்டேஷனை சேர்ந்த போலீஸ்காரர் லட்சுமணன், 32, சேலத்தை சேர்ந்த ஜெயராமன், 20, ராசிபுரத்தை சேர்ந்த ஹரிஷ், 25, அருண்குமார், 24, என, ஆறு பேரை கைது செய்தோம்.போலீஸ்காரர் லட்சுமணனுக்கு, ஹரிஷ், அருண்குமார், ஜெயராமன் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. மூவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களை கண்காணித்து, வாடிக்கையாளர் போல் சென்று பணம் பறிப்பது தெரிந்தது.திருப்பூரிலும் இதேபோல் பணம் பறிக்க திட்டமிட்டனர். அதற்காக நோட்டமிட்டு, தாராபுரம் ரோட்டில், தங்கள் கைவரிசையை காட்ட திட்டமிட்டனர். பெண்ணின் வீட்டுக்கு மூன்று பேர் வாடிக்கையாளர் போல் முதலில் சென்றனர்.அதன்பின், போலீஸ்காரர்கள் கோபால்ராஜ், சோமசுந்தரம், லட்சுமணன் ஆகிய மூவரும் சென்று அப்பெண்ணை மிரட்டி, ஒரு லட்சம் ரூபாய் கேட்டு, கணவரை கடத்தி சென்றனர். பெருமாநல்லுாரில் உள்ள ஒரு வீட்டில் ஏற்கனவே இவர்கள் ஈரோட்டில் வைத்து கடத்தி வந்த திருச்சியை சேர்ந்த தனபால் சிங், 47, ஈரோட்டை சேர்ந்த முருகன், 42, ஆகியோருடன் பெண்ணின் கணவரையும் அடைத்தனர். கைதானோரிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
3 போலீஸ்காரர்கள் 'சஸ்பெண்ட்'
திருப்பூரில் கடத்தலில் கைது செய்யப்பட்ட மூன்று போலீஸ்காரர்கள், திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் இருந்த போது நண்பர்கள். கோபால்ராஜ், லட்சுமணன் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். கோபால்ராஜ் ஊத்துக்குளி ஸ்டேஷனில் பணியாற்றிய போது, பல புகார்கள் காரணமாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். பெருமாநல்லுார் ஸ்டேஷனில் பணிபுரிந்த லட்சுமணன் ஒழுங்கு நடவடிக்கையாக, நீலகிரி மாவட்டம், சோலுார் மட்டம் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். நேற்று முன்தினம் பணிக்கு சென்று விட்டு, மதியத்துக்கு பின் திருப்பூருக்கு வந்து இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளார். சோமசுந்தரம் இரண்டு ஆண்டுகளாக பணிக்கு வராமல் தொடர்ச்சியாக அறிவிக்கப்படாத விடுப்பில் இருந்தார். கடந்த ஏப்., மாதம் பணிக்கு வந்த அவர், மீண்டும் விடுப்பில் உள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட மூன்று போலீஸ்காரர்களை, 'சஸ்பெண்ட்' செய்ய திருப்பூர் மற்றும் நீலகிரி எஸ்.பி., உத்தரவிட்டுள்ளனர்.