உடுமலை : போதிய இருக்கை வசதி கூட இல்லாமல், பஸ் ஸ்டாண்டில் மக்கள் தவிக்கும் நிலைக்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, அனைத்து தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கோவை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள, உடுமலை பஸ் ஸ்டாண்ட், 1964ல் கட்டப்பட்டது.இதையடுத்து, 1996ல், அதன் மேற்குப்பகுதியில், விரிவாக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், பஸ்கள் எண்ணிக்கை மற்றும் பயணியர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் அலட்சியம் காட்டப்படுகிறது.கடந்த, 2018ல், நகராட்சி சார்பில், 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கழிப்பிடம் அமைத்தல், இருக்கைகள் மற்றும் மின்விசிறிகள் அமைத்தல் போன்ற பணிகள் பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள் மேற்கொள்ளப்பட்டன.அதன்பின்னர், போதியளவு பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.தற்போது, பொள்ளாச்சி, பழநி, மூணாறு, திருப்பூர் வழித்தட பஸ்கள் நிற்கும் இடத்திலுள்ள இருக்கை வசதிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டன. குறிப்பாக, இருக்கைகள் உடைந்து, பயணியரை காயப்படுத்தும் நிலையில் உள்ளது. தொலைதுார பஸ்களுக்காக காத்திருப்பவர்களுக்காக கட்டப்பட்ட கூடத்தில், இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி, மின்விசிறிகளும் காட்சிப்பொருளாக மாறி விட்டன. இதனால், கொளுத்தும் வெயிலில், மக்கள், பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ள நடைபாதையையும் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து கொள்வதால், மக்கள் பஸ்கள் நிற்கும் 'ரேக்' பகுதியிலேயே காத்திருக்க வேண்டியுள்ளது.நகராட்சி நிர்வாகத்தினர் பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.