கல்லுாரி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை
உடுமலை: உடுமலை, அரசு கலைக்கல்லுாரி ரோட்டில் பஸ் வசதி குறைவாக இருப்பதால், மாணவர்கள் படியில் தொங்கி பயணம் செய்யும் அவலம் ஏற்படுகிறது.உடுமலை அரசு கலைக்கல்லுாரிக்கு, சுற்றுப்பகுதி கிராமம், தாராபுரம், பழநி, பொள்ளாச்சி என பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர்.கல்லுாரி மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், இரண்டு ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடக்கிறது.கல்லுாரிக்கு செல்வதற்கு திருமூர்த்திமலை, அமராவதி நகர், குறிச்சிக்கோட்டை செல்லும் பஸ்களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.ஆனால், இந்த பஸ்கள் நிறுத்தப்படும் ஸ்டாப்பிலிருந்து, ஒரு கி.மீ.,க்கு அதிகமாக நடந்து மாணவர்கள்கல்லுாரிக்கு செல்ல வேண்டும்.சில பஸ்கள் மட்டுமே, கல்லுாரி வழிதடத்தில் இயக்கப்படுகின்றன. காலை கல்லுாரி துவங்கும் நேரத்துக்கு, பஸ் வசதி மிக குறைவாக உள்ளது. இதனால் மாணவர்கள் போடிபட்டி வழியாக இயக்கப்படும் பஸ்களில் செல்ல வேண்டியுள்ளது.இருப்பினும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் செல்லும் கல்லுாரிக்கு, காலையில் பஸ் வசதி குறைவாக இருப்பதால், மாணவர்கள் படியில் தொங்கி உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.மாணவர்கள் பயன்பெறுவதற்கு, கல்லுாரி நேரத்துக்கென சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டுமென, போக்குவரத்து துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.