கண்காணிப்பு கேமராக்கள் இயங்க துவங்கின; தினமலர் செய்தி எதிரொலி
உடுமலை : 'தினமலர்' செய்தி எதிரொலியாக, உடுமலை நகரில் அமைக்கப்பட்ட, கண்காணிப்பு கேமராக்கள் இயங்க துவங்கியுள்ளது. நகராட்சி சார்பில், ஆண்டு பராமரிப்புக்கு, ரூ.4.90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.உடுமலை நகரப்பகுதிகளில், குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையில், நகரின் பல்வேறு பகுதிகளில், போலீஸ் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில், 78 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.தொடர்ந்து, நகராட்சி சார்பில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், ஒன்று முதல், 33 வார்டுகளிலும், 96 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், கேபிள் வாயிலாக இணைக்கப்பட்டு, உடுமலை போலீஸ் ஸ்டேஷனில் அமைக்கப்பட்ட, கட்டுப்பாட்டு அறையில் இணைக்கப்பட்டு, மிகப்பெரிய 'டிவி' திரைகள் வாயிலாக கண்காணிக்கும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டது.இந்நிலையில், தொடர் பராமரிப்பு இல்லாததால், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையிலுள்ள 'டிவி' திரையிலும் துண்டிப்பு ஏற்பட்டது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில், கடந்த மாதம், 21ம் தேதி செய்தி வெளியானது.இதனையடுத்து, போலீஸ் மற்றும் நகராட்சி சார்பில், கண்காணிப்பு கேமராக்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு, தற்போது, 78 கேமராக்கள் இயங்கி வருகிறது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், நகராட்சி சார்பில், டிச., 2024 முதல் நவ., 2025 வரை ஒரு ஆண்டுக்கு, கண்காணிப்பு கேமராக்களை பராமரிக்க, ரூ.4.90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.