பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் வருவதை உறுதி செய்ய ஆசிரியர்கள் நடவடிக்கை
உடுமலை; பிளஸ் 1 பொதுத்தேர்வில், அதிக 'ஆப்சென்ட் 'எண்ணிக்கை இருந்ததால், அடுத்தடுத்த தேர்வுகளில் மாணவர்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கு, ஆசிரியர்கள் தீவிரம் காட்டுகின்றனர்.மாநில அளவில், பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வில் முதல் தேர்வான தமிழ் பாடத்தில், திருப்பூர் மாவட்டத்தில், 400க்கும் அதிகமான மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.மிகவும் எளிமையான தமிழ் தேர்வில், மாணவர்கள் வராமல் விட்டதால், அடுத்தடுத்த தேர்வுகள் குறித்து ஆசிரியர்களும் குழப்பமடைந்துள்ளனர்.இதனால் மாணவர்களை தொடர்பு கொள்வதற்கும், நேரில் சென்று மாணவர்களின் பெற்றோரை பார்வையிட்டு, தேர்வுக்கு வருவதை உறுதி செய்வதற்கும் ஆசிரியர்கள் களமிறங்கியுள்ளனர்.அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதும், பெறாததும் அடுத்தகட்டம் தான். முதலில் அவர்கள் தேர்வுக்கு வருகை தர வேண்டும்.பிளஸ் 1 வகுப்புக்கு இவ்வாறு அலட்சியமாக விடுவது, பின் பிளஸ் 2 செல்லும் போதும், அந்த தேர்வுடன் பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வுகளையும் எழுதி தேர்ச்சி பெறுவதற்கு, கூடுதல் சிரமத்தை அளிக்கும்.மாணவர்களின் பெற்றோரிடம் இதுகுறித்து தெளிவுபடுத்தி வருகிறோம். மாணவர்கள் தேர்வுக்கு நுாறு சதவீதம் வருகை தருவதற்கு ஊக்குவித்து வருகிறோம்.இவ்வாறு கூறினர்.