உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 10 ஆண்டில் 22 லட்சம் மரங்கள் வனத்துக்குள் திருப்பூர் திட்டம் படைத்தது சாதனை

10 ஆண்டில் 22 லட்சம் மரங்கள் வனத்துக்குள் திருப்பூர் திட்டம் படைத்தது சாதனை

திருப்பூர்: 'மண்ணுக்கு அழகு மரம்... மனிதருக்கு அழகு அறம்' என்ற வார்த்தையை மெய்ப்பிக்கும் வகையில், பல்வேறு தொழில் சவால்களுக்கு மத்தியிலும், 10 ஆண்டுகளில், 22 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்க்கும் அறப்பணியில் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு சாதனை படைத்துள்ளது.திருப்பூர் 'வெற்றி' அறக்கட்டளை சார்பில், நொய்யல் தடுப்பணை மற்றும் குளம் பராமரிப்பு, அரசு பள்ளி உருவாக்கம், மரம் வளர்ப்பு என, பல்வேறு அறப்பணிகள் நடந்து வருகிறது. அவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தது போல், 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற மரம் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாம் நினைவு நாள் அஞ்சலி கூட்டத்தில் துாவிய விதை, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு மூலம் பசுமைப்பணி முன்னெடுக்கப்பட்டது ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன் துவங்கிய பசுமை பயணம், 10 ஆண்டுகளில், 22 லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 18 லட்சம் கன்றுகள், இளம் மரங்களாக வளர்ந்து பசுமைக்கு கட்டியம் கூறி வருகின்றன.'வனத்துக்குள் திருப்பூர்,' 10 ஆண்டுகளில் செயல்படுத்திய, செயல்படுத்தி வரும் முத்தான திட்டங்கள் வருமாறு: இடுவாய் சின்னக்காளிபாளையத்தில் உள்ள மாநகராட்சியின், 12 ஏக்கர் நிலத்தில், மாநகராட்சி அறிவியல் பூங்கா, அரிய வகை மூங்கில்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கிய நுால்களில் உள்ள குறிப்புகளில் இருந்து, அரிய வகை மரக்கன்றுகள் கண்டறியப்பட்டன. அவற்றை நட்டு வளர்த்து, சங்க இலக்கிய பூங்கா உருவாக்க திட்டமிடப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி சந்திராபுரம் பகுதியில், அரிய வகை மரங்கள் நட்டு, சங்ககால பூங்கா பணி நடந்து வருகிறது. மரங்களின் பெயர், தன்மை, இடம்பெற்ற பாடல் குறிப்புகளுடன், கல்வெட்டு அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். திருப்பூர், நடராஜா தியேட்டர் ரோடு பகுதியில் மீட்கப்பட்ட இடத்தில், அதிக அளவு கடம்ப மரங்களை நட்டு, கடம்ப வனம் என பல்வேறு பூங்காக்கள் உருவாக்கும் பணியும் நடந்து வருகிறது. திருப்பூர் சாயக்கழிவு நீரால் மாசுபட்ட, நொய்யலின் குறுக்கே கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணைக்கும் புத்துயிர் அளிக்கும் திட்டமும் துவங்கியுள்ளது. அணைக்கட்டு பகுதியில், ஆயிரம் ஏக்கரில் மரக்கன்று நட்டு, பசுஞ்சோலையாக மாற்றும் திட்டம் வெற்றிகரமாக துவங்கியுள்ளது.

சிறப்பு பட்டிமன்றம்

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின், 10 ம் ஆண்டு விழா, வரும் 1ம் தேதி, திருமுருகன்பூண்டியில் ஐ.கே.எப்., வளாகத்தில் நடக்கிறது.'வெற்றி' அறக்கட்டளை தலைவர் சிவராம் கூறுகையில், ''வனத்துக்குள் திருப்பூர் -10' திட்ட நிறைவு விழாவும், 11வது திட்டத்துக்கு நர்சரி துவக்கவிழாவும், மார்ச் 1ம் தேதி நடக்கிறது. 'வீ த லீடர் பவுண்டேஷன்' முதன்மை சேவகரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான அண்ணாமலை தலைமை வகித்து, 'சூழலியல் மாற்றத்தில் தொழில் முனைவோர் பங்கு' என்ற தலைப்பில் பேசுகிறார். 'இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது பொதுமக்களா...? இல்லை பொறுப்பில் இருப்பவர்களா...?' என்ற தலைப்பில், ராஜா மற்றும் பாரதிபாஸ்கர் பங்கேற்கும் பட்டிமன்றம் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த, 2015ல் துவங்கிய இந்த வெற்றி பயணத்தில், 2024ம் ஆண்டு வரையிலான பத்து திட்டங்களில், 22 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 'தினமலர்' நாளிதழ், இத்திட்டத்தை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்துள்ளது. நிலத்தை விலைக்கு வாங்கி மரம் வளர்க்கும் அளவுக்கு, பசுமை தாக்கம் ஏற்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை