| ADDED : மே 16, 2024 05:31 AM
பல்லடம், : பல்லடம் நகராட்சி அலுவலகத்தில், புகார் மனு அளிக்க வந்த வணிகர்கள் கூறியதாவது:விதிமுறைப்படி கட்டடம் கட்டி அதற்கான பணி நிறைவு சான்று பெற்ற பின், மின் இணைப்பு வழங்கும் விதிமுறையை ஏற்கிறோம். ஆனால், ஏற்கனவே கட்டப்பட்டு பணி நிறைவு சான்று பெற காத்திருக்கும் கட்டடங்களுக்கு இந்த விதிமுறையை தளர்த்த வேண்டும்.கட்டடம் கட்டும் போதே விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தி, விதிமுறைப்படி கட்டினால் தான் அனுமதி கிடைக்கும் என்பதை திட்டவட்டமாக சொல்லியிருக்க வேண்டும். ஏற்கனவே, கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, பணி நிறைவு சான்று வழங்க இழுத்தடித்து வருவதால், தற்காலிக மின் இணைப்பு பெற்று கூடுதல் மின் கட்டணம் செலுத்துவதுடன், வாடகைக்கு விட முடியவில்லை.பல்லடம் பஸ் ஸ்டாண்டில், நகராட்சிக்கு உட்பட்ட, 48 வணிக வளாக கடைகள் விதிமுறை மீறி கட்டப்பட்டும், அவற்றுக்கு பணி நிறைவு சான்று வழங்கப்பட்டுள்ளது.எனவே, 'எங்களுக்கு வந்தால் மட்டும் தக்காளி சட்னியா?' என்ற கேள்வி எழுகிறது. விதிமுறைகளை தளர்த்தி எங்களுக்கு மின் இணைப்பு வழங்காவிட்டால், நகராட்சிக்கு உட்பட்ட வணிக கடைகளுக்கும் மின் இணைப்பு வழங்கக் கூடாது. இது குறித்து கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.மனுவை பெற்று கொண்ட கமிஷனர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.