உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தக்காளி விலை சரிவு; விளைநிலத்திலேயே அழிகிறது

தக்காளி விலை சரிவு; விளைநிலத்திலேயே அழிகிறது

உடுமலை; சந்தைக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுப்படியாகாத விலை இருப்பதால், தக்காளியை விளைநிலங்களிலேயே வீசி எறியும் நிலைக்கு குடிமங்கலம் வட்டார விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், கோழிக்குட்டை, அம்மாபட்டி, சனுப்பட்டி, சோமவாரப்பட்டி, ஆலாமரத்துார் உள்ளிட்ட பகுதிகளில், கிணற்று பாசனத்துக்கு பரவலாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.கடந்த சீசனில், தொடர் மழையால், செடிகள் பாதித்து, தக்காளி விளைச்சல் குறைந்தது. சந்தைகளிலும் வரத்து குறைந்து விலை எகிறியது. வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, பரவலாக மீண்டும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை துவங்கியுள்ளது. சாகுபடி பரப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், சந்தைக்கு வரத்து அதிகரித்து, விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, உடுமலை உழவர் சந்தையில், தக்காளி, கிலோ 8 - 12 ரூபாய்க்கே விற்பனையானது.விலை வீழ்ச்சியால், குடிமங்கலம் வட்டாரத்தில் இருந்து, உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட சந்தைகளுக்கு தக்காளி கொண்டு செல்லும் போக்குவரத்து செலவுக்கே கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.கோழிக்குட்டை பகுதி விவசாயிகள் கூறுகையில், 'தக்காளி பறிக்க போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. இடுபொருட்கள் விலை உயர்வால், சாகுபடி செலவும் அதிகரித்துள்ளது.ஆனால், சந்தையில், தக்காளி கிலோவுக்கு, 10 ரூபாய் கூட கிடைப்பதில்லை. இங்கிருந்து, 20 கி.மீ., தொலைவிலுள்ள சந்தைக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவுக்கு கூட தற்போதைய விலை கட்டுபடியாகாதுஎனவே, அறுவடை செய்த தக்காளியை விளைநிலங்களிலேயே கொட்டி அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !