பொங்கலுார்;பொங்கலுார் அருகே சாலை வசதி கேட்டு, இ.கம்யூ., சார்பில், மறியல் போராட்டம் நடந்தது. கண்டியன்கோவில் கிராமத்தில், பெரியாரியபட்டி-, கந்தாம்பாளையம் ரோடு, கருணைபாளையம்- ஓலப்பாளையம் ரோடு உள்ளிட்ட, 9 ரோடுகள் மோசமாக உள்ளது. இதற்கு, 10 ஆண்டு கடந்தும் தீர்வு காணப்படாததை கண்டித்து, நேற்று இ.கம்யூ., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.கோவை - திருச்சி என்.எச்., ரோட்டில், கருணைபாளையம் பிரிவில், நுாற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து அப்பகுதிக்கு சென்ற பி.டி.ஓ., விஜயகுமார், பொதுமக்களிடம் பேசினார். அதில், 'ஐந்து சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைக்கப்படும். ஒரு சாலை மட்டும் ஒன்றிய நிதியில் மேற்கொள்கிறோம்,' என்றார். இதனால், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். போராட்டம் காரணமாக, 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இ.கம்யூ., மாவட்ட செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர் தங்கவேல், துணைச் செயலாளர் தெய்வசிகாமணி, பொருளாளர் ஜோதிபாசு, உட்பட பலர் பங்கேற்றனர்.---கண்டியன் கோவில் பகுதியில், சாலை வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி, இ.கம்யூ.,வினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.