உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பருவநிலை மாற்றம் எதிர்கொள்ள மரம் வளர்ப்பு கட்டாயம்

பருவநிலை மாற்றம் எதிர்கொள்ள மரம் வளர்ப்பு கட்டாயம்

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் 10ம் ஆண்டு விழாவும், 11வது ஆண்டு திட்டத்துக்கான நாற்று பண்ணை துவக்க விழாவும், நேற்று நடந்தது. திருமுருகன்பூண்டி அடுத்த ஐ.கே.எப்., வளாகத்தில் நடந்த விழாவுக்கு, 'வீ த லீடர் பவுண்டேஷன்' முதன்மை சேவகர் அண்ணாமலை தலைமை வகித்தார்.'தினமலர்' இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு, 'வெற்றி' அமைப்பின் கவுரவ தலைவர் கோபால கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். 'தினமலர்' இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு, அண்ணாமலை ஆகியோர், விதைகளை துாவி, தண்ணீர் ஊற்றி, நாற்று பண்ணை பணியை துவக்கி வைத்தனர்.'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம் வரவேற்று பேசியதாவது:பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் தான், மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது கட்டாயமாக மாறியுள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில், பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்துள்ளோம். அதிகப்படியான மரங்களை வளர்த்தால், வெப்பம் சற்று குறையுமென நம்புகிறோம்.வெற்றி அமைப்பு மட்டுமல்லாது, பல்வேறு அமைப்புகளும், ஐந்து லட்சம் அளவுக்கு மரங்களை நட்டு வளர்க்கின்றன. கடந்த, 2000வது ஆண்டில் துவங்கி, குளம் மேம்பாடு, அணைக்கட்டு சீரமைப்பு, அரசு பள்ளி உருவாக்கம், மாநகராட்சி பகுதிகளில் பூங்கா உருவாக்கம், மழைநீர் சேகரிப்பு என, பல்வேறு அறப்பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் விவசாயிகள் ஆர்வமாக முன்வந்து, மரங்களை நட்டு வளர்க்கின்றனர். திருப்பூரை சேர்ந்த தொழில்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள், தேவையான உதவிகளை தடையின்றி செய்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக, மாவட்ட அளவில், 500 பசுமை தன்னார்வலர்களை உருவாக்கி கொடுத்துள்ளோம். இவ்வாறு, அவர் பேசினார்.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் பணியாற்றும் டிரைவர்கள், களப்பணியாளர்கள் மற்றும் தோட்டப்பணியாளர்கள், நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், பல்வேறு இளம் பசுமை அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர். 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட இயக்குனர் குமார் துரைசாமி, நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை