பாதுகாப்பில்லாத அங்கன்வாடி மையம்; கண்டுகொள்ளாத உள்ளாட்சி அமைப்புகள்
உடுமலை : போத்தநாயக்கனுார் அங்கன்வாடி மைய வளாகம் புதர் மண்டி, பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது.மடத்துக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட போத்தநாயக்கனுாரில் உள்ள அங்கன்வாடி மையத்தில், பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.அரசு பள்ளியின் அருகில், இந்த மையம் செயல்படுகிறது. மையத்தின் பின்புறம் முட்செடிகள் புதர்க்காடாக வளர்ந்துள்ளது. அங்கிருந்து அடிக்கடி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் அங்கன்வாடி மையத்தின் அருகே உலா வருகின்றன.இதனால், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. அங்கன்வாடி மையத்தின் அருகிலுள்ள பள்ளியின் சுற்றுச்சுவரும் இடியும் நிலையில் உள்ளது.புதர்செடிகளை அப்புறப்படுத்தாமல் இருப்பதால், விஷப்பூச்சிகள் தற்போது அதிக அளவில் அப்பகுதியில் தஞ்சமடைகின்றன. பெற்றோர் நாள்தோறும் அச்சத்துடன் குழந்தைகளை அனுப்புகின்றனர்.இதுகுறித்து, பெற்றோர் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும், செடிகளை அப்புறப்படுத்தி, அவ்விடத்தை துாய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். பெற்றோர் கூறியதாவது: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அங்கன்வாடி மையம் அருகே, இரண்டு பாம்புகள் பிடிக்கப்பட்டன. நாள்தோறும் விஷ ஜந்துகள் தென்படுவதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.உடனடியாக புதர் செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். மைய கட்டடத்தில், அடிப்படை பராமரிப்பு பணிகளையும் பேரூராட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும். மையத்துக்கு சுற்றுச்சுவர் கட்டுவதும் அவசியமாகும். இவ்வாறு கூறினர். பெரியகோட்டை
பெரியகோட்டை அங்கன்வாடி மையம் சிதிலமடைந்து, குழந்தைகளுக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. பெரியகோட்டை ஊராட்சி, சிவசக்தி காலனி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.அங்கன்வாடியின் மேற்கூரை சிதிலமடைந்து, அவ்வப்போது அதன் சுண்ணாம்பு பூச்சுகள் உருகி கீழே விழுகிறது. சமையலறையும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு, எந்த நேரத்திலும் ஆபத்து காத்திருக்கும் வகையில் கட்டடம் உள்ளது. பணிசெய்யும் அங்கன்வாடி மையத்தினரும், அச்சத்துடன் சமைலறையில் பணிசெய்ய வேண்டியுள்ளது. பெரியகோட்டை அரசு பள்ளி வளாகத்தில், புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடக்கிறது. இருப்பினும் கட்டடத்தின் நிலை மோசமாகவே இருப்பதால், குழந்தைகளை அங்கு விடுவதற்கு பெற்றோரும் அச்சப்படுகின்றனர்.புதிய கட்டடப்பணிகளை விரைவில் முடித்து, குழந்தைகளை பாதுகாப்பான மையத்துக்கு மாற்ற வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.