நீர் வரத்தால் உயரும் குளங்களின் நீர் மட்டம்; 75 சதவீதத்திற்கு மேல் இரு குளங்களில் நீர் இருப்பு
உடுமலை : உடுமலை பகுதியிலுள்ள குளங்களுக்கு நீர் வந்து கொண்டுள்ளதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இரு குளங்களில், 75 சதவீதத்திற்கும் மேல் நீர்இருப்பு உள்ளது.திருமூர்த்தி அணை, பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனம், தளி கால்வாய் வாயிலாக, ஏழு குளங்கள் மற்றும் வலையபாளையம் குளம் பாசன வசதி பெற்று வருகின்றன.இதன் வாயிலாக, 2,786 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், சுற்றுப்புற கிராமங்களிலுள்ள, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் கிணறு, போர்வெல் என விவசாய நிலங்களுக்கான நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளன.பாலாறு பழைய ஆயக்கட்டு, ஏழு குளம் பாசனத்திற்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, தளி கால்வாய் வழியாக, கடந்த, ஆக., 18ம் தேதி நீர் திறக்கப்பட்டது. வரும் மே 31 வரை, 700 மில்லியன் கனஅடி, தேவைக்கு ஏற்ப வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.நீர் திறப்பை தொடர்ந்து குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏழு குளத்தில், பெரிய குளம், 404 ஏக்கர் பரப்பளவும், 11.55 அடி நீர்மட்ட உயரமும், 70.56 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். நேற்று காலை நிலவரப்படி, 5.10 அடி நீர்மட்டமும், 24.40 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் இருந்தது.ஒட்டுக்குளம், 90 ஏக்கர் பரப்பளவில், 10 அடி நீர் மட்ட உயரம், 14.11 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். நேற்று காலை நிலவரப்படி, 3.40 அடி நீர்மட்டமும், நீர் இருப்பு, 2.74 மில்லியன் கனஅடியும் இருந்தது.கரிசல் குளம், 31.22 ஏக்கர் பரப்பளவு, 7.65 அடி நீர்மட்டம், 2.92 மில்லியன் கனஅடி நீர் இருப்பு கொண்டது. இதில், 4.50 அடி நீர்மட்டமும், 1.70 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.தினைக்குளம், 51.19 ஏக்கர் பரப்பளவில், 9.25 அடி நீர்மட்ட உயரம், நீர் கொள்ளளவு 7.23 மில்லியன் கனஅடியாகும். இக்குளத்தில், 6.50 அடி நீர் மட்டமும், 5.50 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.வலையபாளையம் குளம், 52.80 ஏக்கர் பரப்பளவில், 11.33 அடி நீர்மட்டமும், நீர் கொள்ளளவு, 7.63 மில்லியன் கனஅடி உடையதாகும். இக்குளத்தில், 8 அடி நீர்மட்டமும், 6.03 மில்லியன் கனஅடி நீர்மட்டமும் காணப்பட்டது.செங்குளம்,74.84 ஏக்கர், நீர்மட்ட உயரம், 10 அடி, 12.74 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவும் கொண்டதாகும். நேற்று காலை நிலவரப்படி, 6.70 அடி நீர் மட்டமும், 7.74 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் இருந்தது.செட்டிகுளம், 67.49 ஏக்கர் பரப்பளவில், 7.5 அடி நீர்மட்ட உயரம், 7.93 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்டதாகும். இக்குளத்தில், நீர் மட்டம், 5 அடியாகவும், நீர் இருப்பு, 4.50 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது.அம்மாபட்டி குளம், 31.22 ஏக்கர் பரப்பளவில், 4.50 அடி நீர்மட்டம், 1.76 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். இக்குளத்திற்கு நீர்வரத்து இல்லை.இரு குளங்களில், 75 சதவீதத்திற்கும் மேல், தினைக்குளம், வளையபாளையம் குளத்திலும், 50 சதவீதத்திற்கும் மேல், செங்குளம், கரிசல் குளம், செட்டிகுளத்திலும், 50 சதவீதத்திற்கும் கீழ், ஒட்டுக்குளம், பெரிய குளத்திலும் நீர் இருப்பு உள்ளது. அம்மாபட்டி குளம் வறண்டு காணப்படுகிறது.