உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராம நுாலகத்தை எதுக்கு பூட்டினாங்க! போராட்டத்துக்கு தயாராகும் மக்கள்

கிராம நுாலகத்தை எதுக்கு பூட்டினாங்க! போராட்டத்துக்கு தயாராகும் மக்கள்

உடுமலை;பகுதி நேர நுாலகம் ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளதால், மானுப்பட்டி கிராம மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்; நுாலக ஆணைக்குழுவும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.உடுமலை ஒன்றியம் மானுப்பட்டியில், கடந்த, 2017ல், கிராம மக்கள் பங்களிப்புடன், பகுதி நேர நுாலகம் துவக்கப்பட்டது. இந்நுாலகம் துவக்க, திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு வாயிலாக பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, கிராமத்தில் பயன்பாடு இல்லாமல் இருந்த அண்ணா மறுமலர்ச்சி திட்ட கட்டடத்தில், நுாலகம் துவக்கப்பட்டது. நுாலக ஆணைக்குழுவின் கீழ் தற்காலிக பணியாளரும் நியமிக்கப்பட்டார்.அப்பகுதி மக்களின் அதிக ஆர்வம் மற்றும் வாசிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், குறுகிய காலத்தில், உடுமலை சுற்றுப்பகுதி கிராம நுாலகங்களை விட, அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.தற்போது, நுாலகத்தில், 1,300க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இதனால், பகுதி நேர நுாலகத்தை கிளை நுாலகமாக தரம் உயர்த்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.ஆனால், முறையான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல், மானுப்பட்டி பகுதி நேர நுாலகம் ஓராண்டாக பூட்டியே கிடக்கிறது.அதிகளவு மக்களும், மாணவர்களும் பயன்படுத்தி வந்த நுாலகம், எவ்வித காரணமும் இல்லாமல் பூட்டியே கிடப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கிராம மக்கள் கூறியதாவது: பகுதி நேர நுாலகம் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. நுாலகத்துக்கு தேவையான கழிப்பிடம், 15வது நிதிக்குழு மானியத்தில் கட்டப்பட்டது.இவ்வாறு, அனைத்து வசதிகளும், ஏற்படுத்தப்பட்டாலும், நுாலக ஆணைக்குழு, நுாலகத்தை பூட்டியே வைத்திருப்பது வேதனைக்குரியதாகும். தரம் உயர்த்தும் நிலையில் இருந்த நுாலகம் ஏன் பூட்டப்பட்டது என தெரியவில்லை.கிராமப்புற மாணவர்கள், நுாலகம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்ட நுாலகரிடம் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து விரைவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி