விடியல் கிடைக்குமா? பாழடைந்த சுகாதார நிலையம்; புதிய கட்டடம் கட்ட வேண்டும்
பல்லடம் : பாழடைந்து கிடக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, புதுப்பிக்க வேண்டும் என, பனிக்கம்பட்டி கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பல்லடம் ஒன்றியம், பனிக்கம்பட்டி கிராமத்தில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கசமுத்திரம் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. பயன்பாடு இன்றி பாழடைந்து கிடக்கும் இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை, புதுப்பிக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அப்பகுதியினர் கூறியதாவது:ரங்கசமுத்திரம் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. மேலும், சுகாதார நிலையம் செயல்பட்டு வந்த கட்டடம், மிகவும் பழுதாகி, பாழடைந்து கிடக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாமல் இருப்பதால், செம்மிபாளையம், புளியம்பட்டி, கரடிவாவி ஆகிய அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று வருகிறோம்.எனவே, தேவையற்ற கால விரயம், அலைச்சல் ஏற்படுகிறது. எனவே, பாழடைந்து கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும். மருத்துவ சேவைகள் அனைத்தும் இங்கேயே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.