நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் பங்களிப்பு அத்தியாவசியம்
திருப்பூர்,: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் திருப்பூர் தொழில் முறை பங்களிப்போர் கூட்டமைப்பு சார்பில், சர்வதேச மகளிர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்; கவுரவ தலைவர் சக்திவேல் சிறப்புரையாற்றினார். துணை தலைவர் ராஜ்குமார், பெண் தொழில் முனைவோர் கமிட்டி தலைவர் சுமிதா ரோஷன் முன்னிலை வகித்தனர். ெதிருப்பூர் தொழில்துறை பங்களிப்போர் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் வரவேற்றார்.ஏற்றுமதியாளர் சங்க தலைவர் தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில்,''திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், பெண்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது; முதன்முதலாக, சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது மகிழ்ச்சி; திருப்பூரின் மொத்த தொழிலாளர்களில், 70 சதவீதம் பெண்கள் இருக்கின்றனர். நிர்வாக பதவிகளில், 60 சதவீதம் பெண்கள் வந்துள்ளனர். திருப்பூரின் ஒட்டுமொத்த வளர்ச்சியில், பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்,'' என்றார். பெண்கள் பங்களிப்புநிறுவன தலைவர் சக்திவேல் பேசுகையில்,''வெற்றியும், தலைமை பண்பும், பெண்கள் வாழ்த்துவதால் மட்டுமே கிடைக்கும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதன்படி, பெண்கள் வாழ்த்தும் அளவுக்கு வாழ வேண்டும். பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில், சட்ட விழிப்புணர்வு பெற்ற பெண்கள் பங்களிப்பு அத்தியாவசியமானது,'' என்றார். மாவட்ட சட்ட சேவை ஆணையத்தின் செயலாளர் ஷபீனா, 'மகளிருக்கான அடிப்படை உரிமைகளும், பணியிட சட்ட பாதுகாப்பும்' என்ற தலைப்பில் பேசியதாவது:பல்வேறு போராட்டங்கள், இயக்கங்களுக்கு பின்னரே, சர்வதேச மகளிர் தினம் உருவானது. சமையல் போட்டி, ரங்கோலி போட்டி நடத்துவதற்காக வந்தது அல்ல; பெண்களுக்கு வேண்டிய உரிமைகளை நிலைநாட்டுவதற்காக உருவானது. ஆண்களுக்கு நிகரான சம்பளம் கேட்டு பெண்கள் போராடியதன் விளைவாக, சர்வதேச மகளிர் தினம் உருவானது.டாக்டர், வக்கீல், கலெக்டர் என, நல்ல பதவிகளில் பெண்கள் இருப்பது மகிழ்ச்சி. இத்தகைய உரிமை சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. தற்போதும், உலகம் முழுவதும் ஆண்களுக்கு நிகரமாக பெண்கள் உயர்ந்துள்ளனரா என்று சிந்திக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில், 2158ம் ஆண்டில்தான் ஆணும், பெண்ணும் சரிசமம் என்ற நிலை உருவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை காத்திருக்காமல், நமக்கான வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தி, வெற்றியாளராக உயர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.-----------------------------திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்த மகளிர் தினவிழாவில், சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பேசினார். இடமிருந்து: ஏற்றுமதியாளர்கள் சங்க துணைத் தலைவர் இளங்கோவன், மாவட்ட சட்ட சேவை ஆணையத்தின் செயலாளர் ஷபீனா, ஏற்றுமதியார்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், சவிதா மருத்துவ மையம் நிறுவனர் சசித்ரா. விழாவில், பங்கேற்றவர்கள்.
'5 எப்' கோட்பாடு
'உழைப்பின் உன்னதமும், ஊட்டச்சத்தின் அவசியமும்' என்ற தலைப்பில், டாக்டர் சசித்ரா பேசுகையில்,''பெண்கள், '5 எப்' பார்முலாவை பின்பற்ற வேண்டும். குடும்பம் (பேமிலி), உணவு (புட்), ஆரோக்யம் (பிட்னஸ்), உணர்வு (பீல்), எதிர்கால திட்டமிடல் (பியூச்சரிங் தாட்ஸ்) என்ற ஐந்து வழிமுறைகளை பின்பற்றலாம். நமது பகுதியில் விளையும் உணவு பொருட்களை சாப்பிட வேண்டும். வயிறு பசித்து உண்டாலும், 80 சதவீதம் மட்டுமே சாப்பிட வேண்டும்; 20 சதவீத இடத்தையும் நிரப்பும் வகையில் சாப்பிடும் போது பாதிப்பு ஏற்படுகிறது. நமது உடல்மொழி அறிந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.