கரும்பு நடவுக்கு விளைநிலங்களை தயார்படுத்தும் பணி தீவிரம்
உடுமலை: ஏழு குள பாசன பகுதிகளில், கரும்பு நடவுக்காக விளைநிலங்களை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.உடுமலை ஏழு குள பாசன திட்ட பகுதிகளில், முன்பு கரும்பு பிரதான சாகுபடியாக இருந்தது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், வெல்லம் தயாரிப்புக்கும் கரும்பு சாகுபடி செய்து வந்தனர்.கரும்புக்கு போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், படிப்படியாக சாகுபடி பரப்பு குறைந்தது. கடந்த சில ஆண்டுகளாக வெல்லத்துக்கும் விலை கிடைக்கவில்லை.தொடர் பாதிப்பு காரணமாக, ஏழு குள பாசன விவசாயிகள், தென்னை மற்றும் இதர காய்கறி சாகுபடிக்கு மாறி விட்டனர். தற்போது குறைந்த பரப்பளவிலேயே கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது: கரும்பு சாகுபடியில், இடுபொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்து விட்டது.ஆனால், போதிய விலை கிடைக்கவில்லை. கரும்புக்கு நிலையான விலை கிடைக்க அரசு உதவாவிட்டால், இச்சாகுபடி முற்றிலுமாக காணாமல் போகும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.