யார்னெக்ஸ் - டெக்ஸ் இந்தியா கண்காட்சி
திருப்பூர்: வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்திக்கு வழிகாட்டும் வகையில், மூன்று நாட்கள் நடந்த 'யார்னெக்ஸ் - டெக்ஸ் இந்தியா' கண்காட்சி நேற்று நிறைவடைந்தது; தொழில்துறைகளை சேர்ந்த 8500 பேர் நேரில் பார்த்து, விசாரணை நடத்தியுள்ளனர்.பெங்களூரு எஸ்.எஸ்., டெக்ஸ்டைல் மீடியா நிறுவனம் சார்பில், திருப்பூர் ஐ.கே.எப்., வளாகத்தில், மூன்று கண்காட்சிகள், கடந்த மூன்று நாட்களாக நடந்தன. நுாலிழைகளை காட்சிப்படுத்திய 'யார்னெக்ஸ்' கண்காட்சி; பனியன் துணிரகம் மற்றும் ஆடைகளை காட்சிப்படுத்திய, 'டெக்ஸ் இந்தியா' கண்காட்சி; சாயம் மற்றும் கெமிக்கல் ரகங்களுக்கான, 'டை கெம்' கண்காட்சி என, முப்பெரும் கண்காட்சிகளும் முத்தாய்ப்பாக நடந்து முடிந்துள்ளது.இயற்கையான பைபர் ரகங்கள், பருத்தி, கம்பளி பட்டு, பிளாக்ஸ் ராமி, செயற்கை ரகத்தில் மறு சுழற்சி நுாலிழைகள், பட்டு, லினன் ரக நுாலிழைகள் இடம்பெற்றன.அகமதாபாத், அமிர்தசரஸ், பகதுர்கர், பெங்களூரு, பெல்லாரி, போபால் என, பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிறுவனங்கள், நெதர்லாந்து, அமெரிக்கா, ஹாங்காங் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் ஸ்டால் அமைத்திருந்தன.திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு, புதிய வகை நுாலிழைகள் மற்றும் துணிரகங்களை, இக்கண்காட்சி அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே, பசுமை சார் உற்பத்தியில் சாதனை படைத்துள்ள திருப்பூருக்கு, இந்தகண்காட்சி, மேலும் புதுவித தொழில்நுட்பங்களை கொண்டு வந்து சேர்ந்துள்ளதாக, தொழில்துறையினர் பாராட்டினர்.தினமும் காலை, 10:00 மணி முதல், மாலை, 7:00 வரை, பார்வையாளர்கள், பரபரப்பாக, ஸ்டால்களை பார்வையிட்டு, வர்த்தக விசாரணை நடத்தி வந்தனர். கடந்த மூன்று நாட்களில் 8,500 பார்வையாளர்கள் நேரில் பார்த்து, விசாரணை நடத்தியுள்ளனர்.
2025 செப்., 25 - 27ல்
மீண்டும் திருப்பூரில் கண்காட்சி'யார்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா, டைகெம்' கண்காட்சிகள், நாட்டின் ஆறு நகரங்களில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கண்காட்சியும், ஆயிரக்கணக்கான வர்த்தகர்களை இணைக்கின்றன.வரும் நவ., 15 முதல் 17ம் தேதி வரை, கோல்கட்டாவில் கண்காட்சிகள் நடக்க உள்ளன. வரும் 2025ம் ஆண்டு ஜன., 17 முதல் 19ம் தேதி வரை லுாதியானாவில் கண்காட்சி நடக்கும். பெங்களூருவில், 2025 பிப்., 7 முதல் 9ம் தேதி வரையில் கண்காட்சி நடக்க உள்ளது. மேலும், 2025 மே 15 முதல் 17 வரையில், மும்பை; 2025 ஜூலை 10 முதல், 12 வரை டில்லி; 2025 செப்., 25 முதல், 27ம் தேதி வரை திருப்பூரிலும் கண்காட்சி நடக்க உள்ளது.- கண்காட்சி அமைப்பாளர்கள்