உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 1.16 லட்சம் விண்ணப்பங்கள்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 1.16 லட்சம் விண்ணப்பங்கள்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முதல் கட்ட முகாம்களில், 1.16 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட முகாம், நாளை துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், முதல் கட்டமாக, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், கடந்த ஜூலை 15ல் துவங்கி, கடந்த 14ம் தேதி வரை நடந்தது. மொத்தம் நடந்த 120 முகாம்களில், 15 அரசு துறை சார்ந்த 46 வகை சேவைகள் அளிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு, தீர்வு காண்பதற்காக அந்தந்த துறையினருக்கு அனுப்பப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 191 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாமில், 10க்கும் மேற்பட்ட சிறப்பு கவுன்டர் அமைக்கப்பட்டு, பெண்களிடமிருந்து மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகிறது. இதற்குத்தான் அதிக கூட்டம் திரண்டது. மொத்த விண்ணப்பங்களில் 47 சதவீதம், அதாவது, 54 ஆயிரத்து 620 விண்ணப்பங்கள், உரிமைத்தொகை கோருபவை. ஏற்கனவே இ-சேவை மூலமாகவும், நேரடியாகவும் சான்றுகள் மற்றும் இதர சேவைகளுக்காக விண்ணப்பித்துவிட்டு, பல நாட்கள், மாத கணக்கில் காத்திருக்கும் நிலை, புரோக்கர்கள் தலையீடு, வீண் அலைச்சலை மக்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. மாவட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை கோருபவை நீங்கலாக, 61 ஆயிரத்து 571 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், 20.17 சதவீதம், அதாவது 12 ஆயிரத்து 419 விண்ணப்பங்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. 2ம் கட்ட முகாம் நாளை துவக்கம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட முகாம்கள், நாளை முதல் (19 ம் தேதி) துவங்குகின்றன. வரும் அக்.10 ம் தேதி வரை, மொத்தம் 96 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதல் நாளில், குடிமங்கலம், அவிநாசி, ஊத்துக்குளி, உடுமலை, தாராபுரம் நகராட்சி, திருப்பூர் மாநகராட்சியின் முதல் மண்டலத்துக்கான முகாம்கள் நடைபெறுகின்றன. நம்பிக்கையை காக்குமா அரசு? தேர்தல் நெருங்கும் நிலையில், மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு. இதனால்தான் ஒருநாள் சம்பளத்தை துறந்தும், காத்திருப்புக்காக கவலைப்படாமல், கைக்குழந்தைகளைத் தோளில் சுமந்தும், முகாம்களில் விண்ணப்பிக்க மக்கள் குவிந்தனர். நம்பிக்கையை காக்குமா, தமிழக அரசு?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி