உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 1330 குறளும் அத்துப்படி; மாணவர்களே, நிதம் படி ரங்கராஜனின் தமிழ் ஆர்வம்

1330 குறளும் அத்துப்படி; மாணவர்களே, நிதம் படி ரங்கராஜனின் தமிழ் ஆர்வம்

திருப்பூர் ; ஐந்தில் வளையாதது அறுபதில் வளையாது என்பர்; ஆனால், 41 வயதில் திருக்குறளின் மீது எழுந்த ஆர்வம், ரங்கராஜனை, குறள் வித்தகராக மாற்றியது.தற்போது அவருக்கு வயது 64; திருப்பூர், சோளிபாளையம், ஆனந்தா அவென்யூவில் வசிக்கிறார். கட்டட நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.ரங்கராஜனுக்கு 1330 குறள்களும் மனப்பாடமாகத் தெரியும். அதிகாரம், எண்கள், அவை கூறும் கருத்து அனைத்தையும் உடனடியாகக் கூறுவார். அரசுப்பள்ளியில் படித்த தன் மகனுக்கு திருக்குறள் கற்றுத்தரும் போது, அதன் மீது ஈர்ப்பு வந்தது. தனது, 41வது வயதில் திருக்குறளை படிக்க துவங்கியவர், 6 மாதத்தில், 1,330 குறளையும், பொருளறிந்து கரைத்து குடித்து விட்டார். குறிப்பிட்ட வார்த்தைகளில் முடியும் குறள்கள், மலர், எண்களை கொண்ட குறள், என தனித்தனியாக பகுத்தாய்வு செய்தும் கூறுகிறார்.பள்ளிகள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று, குறள் கூறும் ஒழுக்க நெறியை போதித்து வருகிறார். திருவள்ளுவர் தினமான நேற்றுமுன்தினம், தனது வீட்டில் வைத்துள்ள, 3 அடி திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் துாவி, பூஜை செய்து, 1,330 குறள், அதன் மூலப்பொருளை ஒப்புவித்தல் (முற்றோதல்) செய்தார்.''சமுதாயத்தில் அடிமட்ட நிலையில், கண்டு கொள்ளப்படாமல் இருந்த என்னை உயர்த்தியது திருக்குறள்.யாரிடம் எப்படி என்ன பேச வேண்டும், எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற வாழ்வியலை கற்றுக் கொடுக்கிறது திருக்குறள்.பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவசமாக திருக்குறள் கற்றுக் கொடுத்து, அனைவரிடத்திலும் குறள் சென்று சேர்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.குறள் வழி நடக்க ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும்,'' என்று கூறுகிறார் ரங்கராஜன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை