18,613 டன் நெல் கொள்முதல் ரூ.455 கோடி விடுவிப்பு
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், அமராவதி மற்றும் கீழ்பவானி பாசன பகுதிகளில், அதிக அளவு நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், கொள்முதல் மையங்கள் திறந்து, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது; விவசாயிகளுக்கு, வங்கி கணக்கு வாயிலாக, அதற்கான தொகை வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டில், சன்னரக நெல்லுக்கான ஆதார விலையாக, 2,320 ரூபாய்; ஊக்கத்தொகை, 130 ரூபாயும், பொது ரகத்துக்கு, 1,300 ரூபாய், ஊக்கத்தொகை, 105 என, 1,405 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம் - 6, தாராபுரம் - 8, மடத்துக்குளம் -4, உடுமலை -1 என, 19 இடங்களில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து, 16 ஆயிரத்து, 521 டன் எடையுள்ள சன்னரக நெல் கொள்முதல் செய்யப்பட்டது.பொதுரகத்தில், 2,092 டன் அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டது. விவசாயிகளுக்கான தொகை, 455 கோடி ரூபாய் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல், மாவட்டத்தில் உள்ள, நுகர்பொருள் வாணிப கழக அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொது வினியோக திட்ட அரிசியாக பெறப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், மடத்துக்குளம் தாலுகா கணியூர் மற்றும் ருத்ராபாளையம், உடுமலை, கல்லாபுரம் பகுதிகளில், நெல் கொள்முதல் மையம் தொடர்ந்து இயங்கி வருகிறது.நடப்பு நிதியாண்டில் (2025-26) காரீப் பருவத்தில், நெல் அறிக்கையின்படி, செப்., மாதம் முதல் நெல் அறுவடை துவங்க உள்ளது. அதன்படி, தேவையான இடங்களில் நெல் கொள்முதல் மையம் அமைக்கவும், அதற்கு ஏற்ப சாக்கு பை உள்ளிட்ட தளவாடங்களுடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தயார்நிலையில் உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.