பின்னலாடை தொழிலின் ஏ டூ இஸட் அறிய 25 வாரம் போதும்! புதிய தொழில்முனைவோரை உருவாக்க பயிற்சி
திருப்பூர்:பின்னலாடை துறையில் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில், 25 வாரங்களில், முழுமையான பயிற்சி அளிக்கும் திட்டம், திருப்பூரில் செயல்படுத்தப்படுகிறது. 'பின்னலாடை நகர்' ஆன திருப்பூரில், வேலைவாய்ப்புக்கு எப்போதும் பஞ்சம் இல்லை. தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு, திறனறிவு பெற்ற தொழிலாளரும், தொழில்நுட்ப அலுவலர்களும் அதிகளவில், தேவைப்படுகின்றனர். 'நாளையே 50 ஆயிரம் பேர் வந்தாலும் வேலை தயார்' என்று அழைக்கிறது, திருப்பூர். தொழிலாளர், தொழில்முனைவோர் உருவாக்கத்துக்கு வழிகாட்டும் வகையில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டு முயற்சியால், 'நிப்ட்-டீ' கல்லுாரி 1997ல் துவங்கப்பட்டது. புதிதாக தொழில் துவங்க, அத்துறை தொடர்பான அனுபவம் அவசியமாகிறது. நவீன தொழில்நுட்ப இயந்திரங்களை இயக்க, திறமையான தொழிலாளர்களும் தேவைப்படுகின்றனர். சில ஆண்டுகளாக, படித்த இளைஞர், இளம்பெண்கள், புத்தொழில் துவங்க விரும்புகின்றனர். அத்தகைய ஆர்வமுள்ள நபர்களை தொழில்முனைவோராக உயர்த்தவே, தொழில்நுட்ப பயிற்சி மற்றும் 25 வாரகால முழுமையான பயிற்சி திட்டத்தை, 'நிப்ட்-டீ' கல்லுாரி செயல்படுத்தி வருகிறது. தொழில்முனைவோராக கால்பதிக்க விரும்புவோர், தொழிலின் அடிப்படையை கற்றுக்கொள்ள இப்பயிற்சி உதவும். 'கட்டிங்' துவங்கி 'பேக்கிங்' வரை அனைத்து தொழில்நுட்பமும் கற்றுத்தரப்படுகிறது. பின்னலாடைத் துறையினர் கூறுகையில், 'ஒரு தொழில்முனைவோராக முத்திரை பதிப்பது எளிதானதல்ல; தொழில் குறித்து அறியாமல், தொழில்துறையில் கால்பதிப்பதே பலர் தோல்வியுற காரணமாகிறது; முழுமையாக தொழில் குறித்து கொள்வதோடு, அர்ப்பணிப்பு உணர்வும் அவசியமாகிறது. 25 வாரப் பயிற்சி, இதற்கான அச்சாரமிடும். இன்னும் கூட, பின்னலாடைத் துறையின் ஒவ்வொரு பிரிவுக்கும் பாடத்திட்டம் மற்றும் செயல்முறையுடன் கூடிய பயிற்சித்திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்; இதன் மூலம், திறன் மிகு தொழில்முனைவோர், தொழிலாளர்களை திருப்பூர் பெற முடியும்'' என்றனர். --- 'நிப்ட் - டீ' கல்லுாரியில், பின்னலாடை தொழில் தொடர்பான செயல்முறை பயிற்சி வழங்கப்படுகிறது. அடிப்படை தெரியாதவர்களும் ஆழமாக கற்பதற்கான வாய்ப்பு கடந்த, 18 ஆண்டுகளாக, 'நிப்ட்-டீ' கல்லுாரி வாயிலாக, தொழிற்பயிற்சி அளித்து வருகிறோம். புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், பின்னலாடை தொழில் குறித்து அடிப்படை விவரங்கள் தெரியாதவர்கள் வந்தாலும், புதிய தொழில் முனைவோராக மேம்படுத்துகிறோம். பயிற்சி பெற வயது வரம்பும், கல்வி தகுதியும் கிடையாது; எழுத, படிக்க தெரிந்த அனைவரும் பயிற்சி பெறலாம். மையத்தில், 25 வார கால பயிற்சிக்கு, 18 ஆயிரம் ரூபாயும், மற்ற பயிற்சிகளுக்கு, 12 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; தவணை முறையிலும் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. ஒன்று மற்றும் இரண்டு நாட்கள் இலவச பயிற்சியும், அவ்வப்போது அளிக்கப்படுகிறது.மற்ற பணிகளுக்கு செல்பவர்களும், படிக்கும் மாணவ, மாணவியரும் கூட, ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பகுதிநேர பயிற்சி வகுப்பின் மூலமாக, முழுமையாக பயிற்சி பெற்று பயன்பெறலாம். தொடர்புக்கு: 95979 14182. - மணியன், பகுதி நேர பயிற்சி ஒருங்கிணைப்பாளர், 'நிப்ட் -டீ' கல்லுாரி,