மருத்துவமனை ஊழியரை தாக்கிய 3 பேர் கைது
திருப்பூர் : அரசு மருத்துவமனையில் பணியாளர்களை தாக்கிய, தந்தை உட்பட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், வி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் நாகஜோதிகா, 23. இவருக்கு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்து, இறந்தது. இதனால், ஆத்திரமடைந்த நாகஜோதிகாவின் உறவினர்கள், டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக கூறி, டாக்டர்கள், பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்து, பிரசவ வார்டு கண்ணாடியை உடைத்தனர். பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு நாட்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். இதனை தொடர்ந்து, நாகஜோதிகாவின் கணவர் அபிமன்யூ, 30, மாமானர் முருகன், 57 மற்றும் மைத்துனர் ராகுல், 23 என, மூன்று பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர்.