திருப்பூர்: திருப்பூரில், கார் ஷோரூம் உரிமையாளர் பேசுவதாக கூறி, 49 லட்சம் ரூபாயை ஆன்லைன் வாயிலாக பெற்று மோசடி செய்த விவகாரத்தில், பீஹாரை சேர்ந்த, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், குமரன் ரோட்டில் சவுத் இண்டியன் வங்கி கிளை செயல்படுகிறது. கடந்த, ஆக. மாதம், வங்கி மேலாளர் கீதா கல்யாணியிடம், பல்லடம் ரோட்டில் உள்ள கார் ஷோரூம் உரிமையாளரின் பெயரில் ஒருவர் பேசினார். அதில், தனது கணக்கில் இருந்து, வேறு நபர்களின் மூன்று வங்கி கணக்குகளுக்கு 'ஆன்லைன்' (ஆர்.டி.ஜி.எஸ்.) வாயிலாக, 49 லட்சம் ரூபாயை அனுப்புமாறு கேட்டார். அவ்வாறே, பணம் அனுப்பி வைக்கப்பட்டது. அன்று மாலை வங்கி கணக்கில் இருந்து பணம் குறைந்துள்ளது குறித்து அறிந்த, ஷோரூம் உரிமையாளர் வங்கிக்கு சென்று விசாரித்தார். அதில், அவரின் பெயரில் மர்ம ஆசாமிகள், கைவரிசை காட்டியது தெரிந்தது. இதுகுறித்து வங்கியின் மேலாளர் கீதா கல்யாணி அளித்த புகாரின் பேரில், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். உடனடியாக சைபர் கிரைம் போலீசார் உதவியோடு பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகையில், 32 லட்சம் ரூபாயை முடக்கினர். மீதமிருந்த பணத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நுாதன மோசடி தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். அதில், பீஹார் மாநிலத்தில் இருந்து, ஐந்து பேர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. உடனே பீஹாருக்கு சென்றனர். விசாரணையில், அங்குள்ள ஒருவர் வங்கி கணக்கில் மோசடி செய்தது தொடர்பாக, ரவிக்குமார், 23, விவேக்குமார், 21, விகாஷ்குமார் சோனி, 26, ஷன்னிகுமார், 22 மற்றும் மனிஷ்குமார், 35 என, ஐந்து பேரை அம்மாநில போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது தெரிந்தது. கோர்ட் அனுமதியோடு, ஐந்து பேரையும் 'கஸ்டடி' எடுத்து, திருப்பூருக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கார் ேஷாரூம் உரிமையாளர் போல பேசி, 49 லட்சம் ரூபாய் மோசடி செய்தனர். புகாரின் பேரில், உடனடியாக, 32 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டு, திரும்ப பெறப்பட்டது. மீதமுள்ள பணம், ஹிமாச்சல் குமார் என்பவரின் வங்கி கணக்கை பயன்படுத்தி எடுத்துள்ளனர். அந்த நபருக்கு தெரிய வரவே, ஐந்து பேரை பீஹார் போலீசார் கைது செய்தனர். அதே ஐந்து பேர் தான், திருப்பூரிலும் மோசடி செய்ததுதெரிந்து கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எப்படி, கார் ஷோரூம் உரிமையாளரின் வங்கி கணக்கு விவரம் தெரிந்தது போன்ற பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால், தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.