5 நாள் தொடர் விடுமுறை 110 சிறப்பு பஸ் இயக்கம்
- நமது நிருபர் -ஐந்து நாள் தொடர் விடுமுறையால் திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து 110 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.மகாவீர் ஜெயந்தி, இன்று பங்குனி உத்திரம், நாளை இரண்டாவது சனிக்கிழமை, 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14ம் தேதி, தமிழ்ப்புத்தாண்டு. தொடர் விடுமுறை, விசேஷ தினங்கள் காரணமாக, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, 35, கோவில்வழியில் இருந்து, 50, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 25 என, பிற மாவட்டங்களுக்கு மொத்தம், 110 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல பொது மேலாளர் சிவக்குமார் கூறுகையில், ''நேற்றும், இன்றும், தாராபுரம் வழியாக பழநிக்கும், வரும், 11 மற்றும், 12ம் தேதி, சேலம், அரூர் வழியாக திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயங்கும்.சனி, ஞாயிறு வார விடுமுறை தினங்களில் கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயங்கும். தமிழ் புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு துவங்கி, திங்கள்கிழமை நாள் முழுதும், வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ் இயக்கப்படும்.சிறப்பு பஸ்கள் இயக்கம், நேரம் குறித்து அந்தந்த பஸ் ஸ்டாண்டில் உள்ள உதவி மையங்களில் பயணியர் அறிந்து கொள்ளலாம்,'' என்றார்.