உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மலைவாழ் மக்களுக்கு வரும் தேர்தலில் கனவு நனவாகிறது! உள்ளாட்சிக்காக ஓட்டு போட வாய்ப்பு

மலைவாழ் மக்களுக்கு வரும் தேர்தலில் கனவு நனவாகிறது! உள்ளாட்சிக்காக ஓட்டு போட வாய்ப்பு

உடுமலை: மலைவாழ் மக்கள் உள்ளாட்சி தேர்தலிலும் ஓட்டளிக்கும் நடை முறை, அடுத்து வர உள்ள தேர்தலில் நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில், உடுமலை ஒன்றிய பகுதியில், மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.இதில், மாவடப்பு, குழிப்பட்டி, கருமுட்டி, பூச்சிக்கொட்டாம்பாறை, குருமலை, மேல் குருமலை, ஆட்டுமலை, பொறுப்பாறு, ஈசல்திட்டு, திருமூர்த்திமமலை, தளிஞ்சி, தளிஞ்சி வயல், கோடந்துார் ஆகிய மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.மலைவாழ் மக்களுக்கு, லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் ஓட்டுரிமை அளிக்கப்படுவதோடு, மாவடப்பு, தளிஞ்சி, கோடந்துார் மற்றும் திருமூர்த்திமலையில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், மலைவாழ் மக்களுக்கு அளிக்கப்படும் ஓட்டுரிமை, உள்ளாட்சி தேர்தலில் வழங்க வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளில் இணைந்தால், ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மலைவாழ் மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

5 ஆண்டுக்கு முன்

எனவே, உள்ளாட்சி தேர்தலிலும் ஓட்டுரிமை வழங்க வேண்டும் என மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.ஆனால், அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால், உள்ளாட்சி தேர்தலில் அனுமதியளிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்து வந்த நிலையில், கடந்த, 5 ஆண்டுக்கு முன், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த வழக்கில், மலைவாழ் மக்களுக்கான ஒதுக்கீடு, மறு வரை பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில், திருமூர்த்திமலை, குருமலை, மேல் குருமலை ஆகிய மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் தளி பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டு, ஓட்டுரிமை மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.தற்போது, ஊரக உள்ளாட்சிகளுக்கான பதவிக்காலம், இம்மாதத்துடன் முடிவடையுள்ள உள்ள நிலையில், அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள், அருகிலுள்ள ஊராட்சிகளுடன் இணைத்து, வார்டு உறுப்பினர்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், தலைவர், உறுப்பினர்கள் பதவியும் உருவாக்கப்படும் வாய்ப்புள்ளது.இத்திட்டத்தின் கீழ், தளிஞ்சி, கோடந்துார், ஏழுமலையான் கோவில் பகுதியிலுள்ள மக்கள், மானுப்பட்டி ஊராட்சியில் இணைக்கப்பட உள்ளனர்.கருமுட்டி, குழிப்பட்டி, மாவடப்பு பகுதியிலுள்ள மக்கள், ராவணாபுரம் ஊராட்சியிலும் சேர்க்கப்பட உள்ளது.

இணைப்பு எப்போது?

அதிகாரிகள் கூறியதாவது : மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை, அருகிலுள்ள ஊராட்சிகளுடன் இணைத்து, ஏற்கெனவே, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, மாவட்ட நிர்வாகம் வாரியாக அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்ததும், இணைப்பு பணி மேற்கொள்ளப்படும்.தற்போது, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பு பணி அடுத்து மாதம் மேற்கொள்ளப்படும். அதற்கு பின், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் துவங்கும் போது, மலைவாழ் மக்கள் குடியிருப்புகளும் இணைக்கப்பட்டு, புதிதாக வார்டுகள், ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய குழு , மாவட்ட குழு இணைத்து, தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி