உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நவீன இயந்திர இறக்குமதிக்கு மீண்டும் ஏ-டப் திட்டம்

நவீன இயந்திர இறக்குமதிக்கு மீண்டும் ஏ-டப் திட்டம்

திருப்பூர் : புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களை இறக்குமதி செய்ய ஏதுவாக, 'ஏ - டப்' திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, ஒட்டுமொத்த ஜவுளித்துறையும் கோரிக்கை விடுத்துள்ளது.மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் என்ற (டப்) திட்டத்தை செயல்படுத்தி, ஜவுளித்தொழில் சார்ந்த நிறுவனங்களில், புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் நிறுவன மானியம் வழங்கியது.

எம்பிராய்டரிங்

பின்னலாடை தொழிலை பொறுத்தவரை, ஆடை உற்பத்திக்கான இயந்திர செலவு குறைவு. 'நிட்டிங்', சாய ஆலைகள், 'கம்ப்யூட்டர் எம்பிராய்டரிங்', 'பிரின்டிங்', 'காம்பாக்டிங்', 'ரைசிங்' போன்ற 'ஜாப் ஒர்க்' பிரிவுகளில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை பொருத்தி, இயக்கி வருகின்றனர்.சர்வதேச நாடுகள் வரிசையில், அதிநவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் உற்பத்தியில் சீனா, ஜப்பான், தைவான், அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னோடியாக உள்ளன. உலக அளவில் அறிமுகமாகும், புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை, ஜவுளித்தொழில்துறையினர் வாங்கி பயன்படுத்த, மத்திய அரசு மூலமாக, 'டப்' திட்டம் செயல்படுத்தப்பட்டது.'டப்' திட்டத்தின் வாயிலாக, நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்தால், 10 முதல், 15 சதவீதம் வரை மானியம் கிடைத்தது. முதலீட்டின் மீது, கணிசமான தொகை மானியமாக கிடைப்பது, ஆறுதலாகவும், ஊக்குவிப்பாகவும் இருந்தது. பல மாற்றங்களுக்கு பின், 2016ம் ஆண்டு முதல் 'ஏ-டப்' என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து காலநீட்டிப்பு செய்யப்பட்டு வந்த 'ஏ- டப்' திட்டம், கடந்த 2022 மார்ச் மாதத்துடன் நிறுத்தப்பட்டுவிட்டது.'டப்' திட்டத்தை நீட்டிப்பது குறித்தோ, புதிய திட்டம் குறித்தோ மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி சார்ந்த 'ஜாப்ஒர்க்' துறையினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.தொழில் துறையினர், மத்திய அரசிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்ததால், விரைவில் செயல்படுத்த வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை நம்பி, 2022ம் ஆண்டுக்கு பின்னரும், முன்தேதியிட்டு மானியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இயந்திர இறக்குமதி தொடர்ந்தது. இருப்பினும், எவ்வித அறிவிப்பும் இல்லாமல், மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டது; மானியம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

பயனளிக்காது

திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியில், 'நிட்டிங்', 'காம்பாக்டிங்', 'பிரின்டிங்', 'எம்ப்ராய்டரி', சாய ஆலைகள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட 'ஜாப்ஒர்க்' துறைகள் உள்ளன. இந்நிறுவனங்கள், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளித்து, உற்பத்தித் திறனை பெருக்குவதற்கு, மத்திய அரசின் ' ஏ - டப்' திட்டத்தை பெரிதும் நம்பியிருந்தன .இறக்குமதி செய்யும் இயந்திரங்களுக்கு, 10 முதல் 15 சதவீதம் வரை மானியம் கிடைத்தது, நவீனங்களை நோக்கிய நகர்தலை வேகப்படுத்தியது.கோடிக்கணக்கான ரூபாய்க்கு மெஷின் இறக்குமதி செய்யும்போது, பல லட்சம் ரூபாய் அரசு மானியம் கிடைக்கும். புதிய முதலீடாகவும், வங்கி கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும் இந்த மானியத் தொகை கைகொடுத்தது.உற்பத்தியுடன் இணைந்த மானிய திட்டம் (பி.எல்.ஐ.,) அறிமுகம் செய்யப்பட்டதால், 'ஏ - டப்' திட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், ஜவுளித்துறை எதிர்பார்த்த அளவுக்கு, பி.எல்.ஐ., திட்டம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அத்திட்டத்தால், மிகப்பெரிய நிறுவனம் மட்டுமே துவக்க முடியும்; சிறிய நிறுவனங்களுக்கு பயனளிக்காது. எனவே, மீண்டும் 'ஏ - டப்' திட்டத்தையாவது தொடர வேண்டும் என்பது, ஒட்டுமொத்த ஜவுளித்துறையினர் எதிர்பார்ப்பாக உள்ளது.

அவசியமான வேண்டுகோள்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில்,'' மத்திய அரசு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த, 'ஏ-டப்' திட்டத்தை முன்தேதியிட்டு கால நீட்டிப்பு செய்ய வேண்டும். 'ஏ- டப்' என்ற பெயரை மாற்றி, கூடுதல் விதிமுறைகளை திருத்தம் செய்து, புதிய பெயரிலாவது, இத்திட்டத்தை தொடர மத்திய அரசு முன்வர வேண்டும். கடந்த, 2022 ஏப்., 1 முதல் இறக்குமதி செய்த இயந்திரங்களுக்கு, மானியம் விடுவிக்கும் வகையில், முன்தேதியிட்டு அறிவிக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி