ஆற்றை கடக்க முயன்றவர் பலி; பாலம் இல்லாததால் பரிதாபம்
உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம் அமராவதி வனச்சரகத்துக்குட்பட்ட மலைவாழ் கிராமம் தளிஞ்சி. இக்கிராமத்துக்கு சமவெளியில் இருந்து செல்ல ரோடு வசதியில்லை. உடுமலை - சின்னாறு ரோட்டில் இருந்து அடர் வனப்பகுதியில் நடந்து, கூட்டாறு பகுதியை கடந்து, அப்பகுதியினர் சென்று வருகின்றனர். ஆற்றை கடக்க உயர்மட்ட பாலம் இல்லாததால், தற்காலிகமாக பரிசலில், ஆபத்தான முறையில் பழங்குடியின மக்கள் ஆற்றை கடக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, கேரள மாநிலம், மறையூர் சுற்றுப்பகுதிகளில் பெய்த மழையால், கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தளிஞ்சி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன், 40; மது 38, ஆகியோர், கூட்டாற்றை பரிசலில் கடக்க முயன்றனர். அப்போது, வெள்ளப்பெருக்கால் பரிசல் கவிழ்ந்து, இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மது, மரத்தை பிடித்து உயிர் தப்பியுள்ளார்; மாரியப்பனை காணவில்லை. வனத்துறையினர், உடுமலை தீயணைப்பு நிலையத்தினர் மாரியப்பனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம், மாரியப்பன் உடல், ஆற்றோரத்தில் மீட்கப்பட்டது.