பசுமை பூக்கும் பாக்குத்தோப்பு !
திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், வேலாயுதம்பாளையத்தில், ஆயிரம் பாக்குமரக்கன்றுகள் நேற்று நட்டு வைக்கப்பட்டன.'வெற்றி' அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் வாயிலாக, 19 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது. அதில், 18 லட்சம் எண்ணிக்கையில், மரங்களாக உயர்ந்து வளர்ந்துள்ளன.நடப்பு ஆண்டில், இலக்கை நோக்கி, பசுமைப்படையினர் பரபரப்பாக ஓடிக்கொண்டுள்ளனர். விரைவில், வடமேற்கு பருவம் துவங்க இருப்பதால், பருவமழையை பயன்படுத்தி, மரக்கன்று நடும் பணியை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட, சாமளாபுரம் பேரூராட்சி, வேலாயுதம் பாளையத்தில் உள்ள ஸ்ரீராம்குமார் என்பவரின் தோட்டத்தில், ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. இத்திட்டத்தில் இதுவரை இல்லாத வகையில், பாக்கு மரக்கன்று நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.பாக்குமரங்கள், மூன்றரை ஆண்டில் காய்ப்புக்கு வரும்; அதிலிருந்து பாக்கு அறுவடை செய்யலாம். அதேபோல், பாக்குமட்டையும் உபரி வருவாய் அளிக்கும் என்பதால், பாக்குமரம் வளர்க்க, தற்போது பலரும் முன் வருகின்றனர்.'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மரக்கன்றுகளை இலவசமாக நட்டு வளர்க்க, 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.