சர்வர் கோளாறால் முடங்கிய ஆதார் மையங்கள்
திருப்பூர்: பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் தொழிலாளர் வசதிக்காக, வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சிறப்பு முகாம் நாளான நேற்று, சர்வர் கோளாறு காரணமாக, தமிழகம் முழுதும் காலை, 10:00 மணி முதலே, ஆதார் சேவை முடங்கியது. இதனால், திருத்தங்கள் செய்வதற்காக ஆதார் மையங்களுக்கு சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, வடக்கு தாலுகா அலுவலகத்திலுள்ள மையத்தில், ஆதார் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவியர் உட்பட, பொதுமக்கள் காலை, 9:30 மணி முதலே, ஆதார் மையம் முன் காத்திருந்தனர். இந்நிலையில், காலை, 10:00 மணியளவில், 'சர்வர் கோளாறு காரணமாக ஆதார் பதிவு செய்ய இயலவில்லை' என, அறிவிப்பு ஒட்டப்பட்டது. அத னால், பதிவுக்காக வந்தோர் அனைவரும் திரும்பி சென்று விட்டனர். சர்வர் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு, மதியம், 12:30 மணிக்கு பின், அனைத்து ஆதார் மையங்களும் செயல்படத்துவங்கின. ஆதார் மையம் செயல்படவில்லை என்ற தகவல் பரவியதால், பொதுமக்கள் ஆதார் மையத்தை நாடவில்லை. மாலையில் வந்த சிலருக்கு மட்டும், ஆதார் திருத்தங்கள் செய்யப்பட்டது.