வாகன சோதனையில் வசூல்; எஸ்.ஐ., மீது குற்றச்சாட்டு
திருப்பூர் ; வாகன சோதனை நடத்தி, வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்த சிறப்பு எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி, போலீஸ் கமிஷனருக்கு புகார் அளிக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டல தலைவர் கோவிந்தராஜ் (தி.மு.க.), திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிய புகார் மனு: திருப்பூர் மாநகராட்சி, பழைய ராமகிருஷ்ணா புரம் பகுதியில், கடந்த, 7ம் தேதி பகல் 12:30 முதல் 2:30 மணி வரை, போலீசார் வாகன சோதனை நடத்தினர். வடக்கு போலீஸ் சட்டம் ஒழுங்கு சிறப்பு எஸ்.ஐ., தாமோதரன் மற்றும் போலீசார் இதில் ஈடுபட்டனர். சோதனையின்போது, சிறப்பு எஸ்.ஐ., தாமோதரன், வாகன ஓட்டிகளிடம் மரியாதை குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். ஒரு சிலரை கை நீட்டி அடித்தும் உள்ளார். வாகன சோதனையில் பிடிபட்ட சிலரிடம், 5 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு வழக்கு பதியாமல் அனுப்பியுள்ளார். அவ்வகையில், அப்பகுதியில் சோதனை நடத்திய இரண்டு மணி நேரத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய் வரை அவர் வசூல் செய்துள்ளார். அவர் கேட்ட தொகையைத் தராதவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். எனவே, அவர் மீது சட்ட மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது குறித்து, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், ''புகார் குறித்து கொங்கு சரக உதவி கமிஷனர் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தர விடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.