உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விதை உற்பத்தியை அதிகரிக்க நியமிக்கணும்.. கூடுதல் அலுவலர்கள்! சங்கத்தினர் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

விதை உற்பத்தியை அதிகரிக்க நியமிக்கணும்.. கூடுதல் அலுவலர்கள்! சங்கத்தினர் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

உடுமலை; தமிழகத்தில் விதை உற்பத்தியில் அதிக பங்களிப்பு செலுத்தும், திருப்பூர் மாவட்டத்தில், விதை உற்பத்தியை அதிகரிக்கவும், கூடுதல் தரத்துடன் உற்பத்தி செய்யவும், விதைச்சான்றுத்துறை அலுவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு தேவையான விதை உற்பத்தியை கண்காணிக்கும் வகையிலும், இயற்கை விவசாயத்தை அதிகரிக்கும் வகையிலும், விதைசான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்புதுறை செயல்படுகிறது.தமிழகத்தில், நெல், சோளம், பருத்தி, காய்கறி விதைகள், தானிய விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, வயல் ஆய்வு, கலவன்கள் இல்லாமல் புறத்துாய்மை, முளைப்புத்திறன் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், இத்துறையால் விதைக்கு சான்று வழங்கி, விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.தமிழகத்தில், இணை இயக்குனர், உதவி இயக்குனர்கள் -- 29 பேர் மற்றும் விதைச்சான்று அலுவலர்கள் -- 145 பேர் பணியாற்றி வருகின்றனர். மாநிலத்தில், ஆண்டு தோறும், 1.30 லட்சம் டன் விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.இதில், திருப்பூர் மாவட்டத்தில், ஆண்டு முழுவதும் நிலவும் சீதோஷ்ண நிலை, ஒரே பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், விதை உற்பத்தி சிறப்பாக உள்ளது.ஆண்டுக்கு சராசரியாக, 7,957 ஹெக்டேர் பரப்பளவில் நெல் மற்றும் 2,777 ஹெக்டேர் பரப்பளவில் பிற தானியங்கள் விதைப்பண்ணைகள் அமைத்து, 76,368 டன் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் அமைத்துள்ள, 80க்கும் மேற்பட்ட விதை சுத்தி நிலையங்களில், விதைகள் சுத்திகரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.அதிலும்,குறுவை, சம்பா, தாளடி என மூன்று பருவங்களுக்கும் ஏற்ற, நெல் விதைகள் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.மாநில விதை உற்பத்தியில், 75 சதவீதம் வரை பங்களிப்பு செலுத்தும் திருப்பூர் மாவட்டத்தில், விதை உற்பத்தி அதிகரிக்கவும், விரைவாகவும், கூடுதல் தரத்துடனும் விதை உற்பத்தி செய்யும் வகையில், விதைச்சான்றுத்துறை அலுவலர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், திருப்பூர் மாவட்ட விதை உற்பத்தியாளர் சங்கம் சார்பில், தமிழக முதல்வர், அமைச்சர், விதைச்சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:மாநில விதை உற்பத்தியில், 75 சதவீதம் உற்பத்தியை வழங்கும் திருப்பூர் மாவட்டத்தில், கடந்த, 2019ல் விதைச்சான்றுத்துறை உருவாக்கப்பட்டபோது, ஏற்கனவே இருந்த இரு பணியிடங்கள், விதைசான்று உதவி இயக்குனர், விதைச் சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) என மாற்றம் செய்யப்பட்டது.தற்போது, சான்றுப்பணிகளில், 12 விதைச்சான்று அலுவலர்கள், விதைசான்று உதவி இயக்குனர் தலைமையில் செயல்பட்டு வருகின்றனர்.அதிக விதை உற்பத்தி உள்ள நிலையில், பல முறை வயலாய்வு, அறுவடைக்கு பின் நேர்த்தி, விதை சுத்தி மைய ஆய்வு, முளைப்புத்திறன் ஆய்வு என பல பணிகள் உள்ள நிலையில், தற்போதைய பணி கட்டமைப்பு, விதை உற்பத்திக்கு ஏற்றவாறு இல்லை.ஒவ்வொரு முறையும், கூடுதல் அலுவலர்களை தற்காலிகமாக, பிற மாவட்டங்களிலிருந்து வரவழைத்து வயல் ஆய்வு மற்றும் சான்று பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், உரிய காலக்கெடுவிற்கும் சான்று பணிகளை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு தரமான விதைகள், சரியான பருவத்தில் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.எனவே, மாநில அளவில் பெருமளவில் விதை உற்பத்தி செய்யப்படுகின்ற, தாராபுரம் பகுதிக்கு கூடுதலாக மூன்று விதைச்சான்று அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை