உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி அணை நீர்மட்டம் சரிவு

அமராவதி அணை நீர்மட்டம் சரிவு

உடுமலை: அமராவதி அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ள நிலையில், கோடை கால குடிநீர் தேவைக்காக, நீர் நிர்வாகத்தை திட்டமிட வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார் ஆகிய எட்டு ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட, 7,520 ஏக்கர் நிலங்களில், இரண்டாம் போகம், சம்பா பருவ நெல் சாகுபடிக்குக்காக, வரும் 30ம் தேதி வரை, அணையிலிருந்து நீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் பயன்பெறும், 25,250 ஏக்கர் நிலங்களிலுள்ள நிலைப்பயிர்களை காப்பாற்றும் வகையில், வரும் 20ம் தேதி வரை நீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான, மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் வறட்சி நிலை காணப்படுவதால், கடந்த இரு மாதமாக அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து தொடர்ந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படுவதால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.நேற்று காலை நிலவரப்படி, அணையில் மொத்தமுள்ள, 90 அடியில், 51.12 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 74 கனஅடி நீர்வரத்தும், அணையிலிருந்து பாசனத்திற்கு, 170 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.தாராபுரம் நகராட்சி மற்றும் வழியோர கிராமங்கள் குடிநீர் தேவைக்காக அணை நீராதாரத்தை நம்பியுள்ளதால், கோடை காலத்தை சமாளிக்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, அணை நீர் நிர்வாகத்தை முறைப்படுத்தவும், பாசன நிலங்களுக்கு உயிர்த்தண்ணீர் மற்றும் குடிநீர் தேவைக்காக இருப்பு வைக்க வேண்டும், என, இரு மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை