இந்தியாவை வல்லரசாக்கும் அமிர்த காலம் திட்டம்; புதிய வழிகாட்டி ஆலோசகர்கள் நியமனம்
திருப்பூர்; 'அமிர்த காலம்' திட்டத்துக்கு வழிகாட்டி ஆலோசகர்களை, மத்திய அரசு நியமித்துள்ளது.வரும், 2047ம் ஆண்டில், வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற நிலையை உருவாக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய காலம், 'அமிர்த காலம்' என அழைக்கப்படுகிறது.கடந்த, 3 ஆண்டுக்கு முன் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, அதற்கான பயிற்சி, சுயசார்பு பொருளாதாரம், இந்திய கலாசார பாதுகாப்பு, வறுமையில்லா இந்தியா மற்றும் அனைவருக்கும் கல்வி ஆகியவற்றை இலக்காக கொண்டு 'அமிர்த காலம்' திட்டம் செயல்பட உள்ளது. 2047ம் ஆண்டுக்குள் இந்த இலக்குகள் தன்னிறைவு செய்யப்படும் போது, இந்தியா, வல்லரசு என்ற நிலையை எட்டும் என, மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. இதற்கென நாடு முழுக்க, வழிகாட்டி ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறுகையில், ''அமிர்த காலம் திட்டத்துக்கு நாடு முழுக்க, 500 வழிகாட்டி ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டத்தின் இலக்குகளை கிராமப்புற மக்கள் மத்தியில் கூடுதலாக கொண்டு செல்ல வேண்டியுள்ளது; அதற்கான முயற்சியை வழிகாட்டி ஆலோசகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்,'' என்றார்.