உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை கொட்ட எதிர்ப்பு: கிராம சபா புறக்கணிப்பு

குப்பை கொட்ட எதிர்ப்பு: கிராம சபா புறக்கணிப்பு

பல்லடம்: திருப்பூர் அருகே, இடுவாய் ஊராட்சி சின்னக்காளிபாளையம் கிராமத்தில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், குப்பைகளை தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்கு, இடுவாய் மட்டுமின்றி, 63 வேலம்பாளையம், கரைப்புதுார், ஆறுமுத்தாம்பாளையம் சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, நேற்று நடந்த கிராமசபா கூட்டத்தை, 63 வேலம்பாளையம் கிராம மக்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்தனர். பொதுமக்கள் கூறியதாவது: மாநகராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள சின்னக்காளிபாளையம் கிராமத்தை ஒட்டி, 63 வேலம்பாளையம் கிராமம் உள்ளது. இந்த சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தான், திருப்பூர் மார்க்கெட்டுக்கு அதிகப்படியான காய்கறிகள் செல்கின்றன. விவசாயம் நிறைந்த இந்த கிராமங்களை அழித்துவிட்டு, மாநகராட்சி நிர்வாகம், குப்பைகளை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால், கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நான்கு கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநகராட்சி நிர்வாகம் பணிகளை நிறுத்த மறுக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கிராமசபா கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து உள்ளோம். வேலம்பாளையம் ஊராட்சியை பாதிக்கும், மாநகராட்சியின் குப்பைகள் கொட்டுவதை அனுமதிக்கக்கூடாது என, புகாரும் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக, மாரியம்மன் கோவில் வளாகத்தில் கிராமசபா கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், புகார் அளிக்க வந்த பொதுமக்கள், உள்ளேயும் செல்லாமல், ரோட்டில் இருந்தபடியே புகார் மனுவை அளித்துவிட்டு திரும்பினர். இரண்டு மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள், கூட்டத்துக்கு யாரும் வராததால், அலுவலகத்துக்கு திரும்பினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை