மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி
திருப்பூர்; திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளி, முத்தம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னகுரு. கடந்த 2024 ம் ஆண்டு பிப்., 2ம் தேதி வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றார். திரும்பிய போது, பூட்டு உடைக்கப்பட்டு, ஒரு சவரன் நகை திருடு போனது. புகாரின் பேரில், ஊத்துக்குளி போலீசார் விசாரித்து, ராஜ்குமார், 26 என்பவரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணையில், ஊத்துக்குளி ஜே.எம்., கோர்ட், ராஜ்குமாருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ராஜ்குமார், திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, தண்டனையை உறுதி செய்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார். கொலை மிரட்டல் வழக்கு
திருப்பூர், அவிநாசி ரோடு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜ்குமார், பனியன் தொழிலாளி. கடந்த, 2021 நவ., 2ம் தேதி வீட்டிலிருந்த போது, தினேஷ், 27 என்பவர், வீட்டின் கதவை தட்டி தகராறில் ஈடுபட்டார். ராஜ்குமார் இது குறித்து கேட்க, அவரை கத்தியால் குத்தினார். அனுப்பர்பாளையம் போலீசார் தினேஷை கைது செய்தனர். இவ்வழக்கில் கோர்ட், தினேஷ்க்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து தினேஷ், திருப்பூர் சிறப்பு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், கீழமை கோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார். இவ்விரு வழக்கிலும், அரசு தரப்பில் அரசு கூடுதல் வக்கீல் விவேகானந்தம் ஆஜராகி வாதாடினார்.