உண்மை நிலை தெரியாமல் பேசுவதா? சீமானுக்கு சாய ஆலை சங்கம் எதிர்ப்பு
திருப்பூர்,:'சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு குறித்து உண்மை நிலை தெரியாமல் பேசுவதை, சீமான் போன்ற தலைவர்கள் தவிர்க்க வேண்டும்' என, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மதுரை, விராதனுாரில், நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில், ஆடு, மாடுகள் மாநாடு நடந்தது. அதில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், 'நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு செல்வதால், கால்நடைகள் குடிக்க நீரின்றி தவிக்கின்றன' என, குற்றம் சாட்டினார். மறுசுழற்சி முறை
சீமான் பேச்சுக்கு, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உண்மை நிலை தெரியாமல் பேசுவதை, கட்சி தலைவர்கள் தவிர்க்க வேண்டுமென கூறியுள்ளது.திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் அறிக்கை:நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் செல்வதாகவும், ஆடு, மாடுகள் குடிக்க முடியாத அளவுக்கு தண்ணீர் தகுதியற்றதாக இருப்பதாகவும் சீமான் பேசியுள்ளார். திருப்பூரில், சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக்கு, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பின்பற்றி வருகிறோம்.ஒரு சொட்டு கழிவுநீர் கூட வெளியேற்றுவதில்லை. தினமும், 13 கோடி லிட்டர் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து, 10 கோடி லிட்டரை சுத்தமான தண்ணீராக பிரித்து, மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி வருகிறோம்.சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பை கண்காணிக்க, பொது சுத்திகரிப்பு நிலையங்களிலும் பல்வேறு மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாசுக்கட்டுப்பாடு வாரியம், 'ஆன்லைன்' வாயிலாக கண்காணித்து வருகிறது. அதிகாரிகள், அடிக்கடி நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். தவிர்க்க வேண்டும்
சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு குறித்து உண்மை நிலை தெரியாமல் பேசுவதை, சீமான் போன்ற கட்சி தலைவர்கள் தவிர்க்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும், சாய ஆலைகளை பார்வையிடலாம். சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் வாயிலாக, பொது சுத்திகரிப்பு நிலையங்களிலும் ஆய்வு செய்யலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.