உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அத்திக்கடவு திட்டத்தில் செயற்கை இடர்பாடு : நிலத்தடி நீர் செறிவூட்டும் பணியில் பெரும்பாடு

அத்திக்கடவு திட்டத்தில் செயற்கை இடர்பாடு : நிலத்தடி நீர் செறிவூட்டும் பணியில் பெரும்பாடு

திருப்பூர்: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, கடந்தாண்டு, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்பாடுக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ், 3 மாவட்டங்களில் உள்ள, 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்படுகிறது. இருப்பினும், 'பல குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்படுவதில்லை' என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.'அனைத்து குளம், குட்டைகளுக்கும் சீரான நீர் செறிவூட்டல் பணி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டம் நடத்துவது குறித்தும், அத்திக்கடவு ஆர்வலர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதே நேரம், 'அனைத்து குளம், குட்டைகளுக்கும் சீரான நீர் வினியோகம் இல்லை' என்பதை நீர்வளத்துறை அத்திக்கடவு - அவிநாசி சிறப்பு திட்ட அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதுதான் காரணம்

அதிகாரிகள் அளித்துள்ள விளக்கம்;அத்திக்கடவு குழாய் பொருத்தப்பட்டுள்ள தடத்தில் பிற துறையினரால், அவர்களது திட்டம் சார்ந்த பணி மேற்கொள்ளும் போது, அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழாய்களை சேதப்படுத்தி விடுகின்றனர். சேதப்படுத்தப்பட்ட குழாய்களை சீரமைப்பு செய்து, குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்து, குளம், குட்டைகளுக்கு தடையின்றி நீர் சென்றடைவதற்கான பணிகள் நடந்து வருகிறது.பருவமழை காலங்களில், பவானி ஆற்றில் உபரிநீர் வரத்து, 250 கன அடிக்கு குறையாமல் தொடர்ந்து வரும் போது, நீரேற்று நிலையங்களில் உள்ள 'பம்ப்'களை முழுமையாக இயக்கி, குளம், குட்டைகளுக்கு நீர் சென்றடைவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும்.இவ்வாறு, விளக்கம் அளித்துள்ளனர்.

ஒருங்கிணைப்பு அவசியம்

மொத்தம், 1,916 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் இதுபோன்ற செயற்கை இடர்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறையினர், சாலையோரம் குழாய் பதித்து, பல்வேறு குடிநீர் திட்டங்களின் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். பதிக்கப்பட்டுள்ள குழாயில் அவ்வப்போது ஏற்படும் உடைப்பு, அடைப்பு போன்றவற்றை சரி செய்ய சாலையை தோண்டுகின்றனர்.அவ்வாறு தோண்டும் போது, அந்த தடத்தில் பொருத்தப்பட்டுள்ள தொலை தொடர்புக்குரிய பைபர் கேபிள், மின்வாரியம் சார்பில் பொருத்தப்பட்ட கம்பி உள்ளிட்ட சாதனங்கள் சேதமடைவது, வழக்கமாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. சில நேரங்களில் ரோட்டோரம் செல்லும் கனரக வாகனங்கள் குழாய் மீது மோதி, சேதம் ஏற்படுத்துவதும் நடப்பதுண்டு. அத்தகைய சூழல், தற்போது அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழாய்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. எனவே, நிலத்தடியில் குழாய் மற்றும் கேபிள் பதிக்கும் பணி மேற்கொள்ளும் நீர்வளத்துறையினர், குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் அத்திக்கடவு - அவிநாசி சிறப்பு திட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களுக்குள் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி, செயல்படும் போது, எந்தெந்த இடத்தில், எவ்வளவு ஆழத்தில் குழாய், கேபிள் உள்ளிட்டவை பதிக்கப்பட்டுள்ளது என்பதை பரஸ்பரம் அறிந்து, அதற்கேற்ப பணி மேற்கொள்ள முடியும். இதனால், இதுபோன்ற செயற்கை இடர்பாடுகளை தவிர்க்க முடியும்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி