அத்திக்கடவு 2ம் திட்டம்; பழனிசாமிடம் வலியுறுத்தல்
அவிநாசி; 'அத்திக்கடவு இரண்டாம் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,' என, முன்னாள் முதல்வர் பழனிச்சாமிடம் அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தினர். அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி எழுச்சி பயண பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி இரவு திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் பிரசாரம் செய்தார். அப்போது அவரிடம் எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாநில இணை செயலாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அவிநாசி வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் வேலுசாமி ஆகியோர், 'அத்திக்கடவு - அவிநாசி முதல் திட்டத்தில் பல நுாறு குளம், குட்டைகள் திருப்பூர் மாவட்டத்தில் விடுபட்டு விட்டன. எனவே, அ.தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் நிதி ஒதுக்கி, அத்திக்கடவு இரண்டாவது திட்டத்தை செயல்படுத்தி, விடுபட்ட நுாற்றுக்கணக்கான குளம் குட்டைகளில் நீர் நிரப்பி விவசாயிகளின் வாழ்வு மலர செய்ய வேண்டும்,' என வலியுறுத்தினர்.