கட்டடம் மீது கவர்ச்சி விளம்பரம் கவனச்சிதறலால் விபத்து அபாயம்
பல்லடம்: கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துகள், உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு, தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில், பிளக்ஸ் பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்க ஐகோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ளது.ஆனால், உத்தரவை மீறி, விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கப்படுவது அதிகரித்துள்ளது. வாகன போக்குவரத்து நிறைந்த, பல்லடம், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், ஏராளமான ராட்சத பேனர்கள், விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.விதிமுறை மீறி, கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் மீதும், ராட்சத விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. காரணம்பேட்டையில் உள்ள கட்டடம் ஒன்றின் மீது, தனியார் நிறுவனம் ஒன்றின் கவர்ச்சியான விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இது கவனச் சிதறலை ஏற்படுத்தும் என்பதால், இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. கோர்ட் வழிகாட்டுதல்களை பின்பற்றி, தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள விளம்பரப் பலகைகள், பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.