அவிநாசியிலும் அவலம்
அவிநாசியில், ஆடு, கோழி மற்றும் மீன் இறைச்சி கடைகளிலிருந்து நாள்தோறும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத வீதிகள், தோட்டத்துப் பகுதிகள், சாக்கடைகள், நீர் நிலைகள் என கடைக்காரர்கள் கொட்டி செல்கின்றனர்.மக்கள் பல நோய்த்தொற்று உபாதைகளுக்கு ஆளாவதுடன் ரோடுகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், கடைக்காரர்கள் வீசி சென்ற இறைச்சிகளை தின்றுவிட்டு மனிதர்களையும், கால்நடைகளையும் கடிப்பது தொடர்கதையாக உள்ளது. அவிநாசி நகராட்சி நிர்வாகம், பேரூராட்சியாக இருந்தபோது, 25 ஆண்டுகளுக்கு முன் ஈரோடு ரோட்டில் சந்தை கடை வளாகம் அருகில் ஆடுவதை இறைச்சிக்கூடம் கட்டப்பட்டது.இதுவரை ஆடுவதைக்கூடத்தை திறக்கப்படவும் இல்லை. பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. 'குடி'மகன்களின் கூடாரமாகவும் சமூக விரோத செயல்கள் செய்பவர்கள் பதுங்கும் இடமாகவும் திறந்த வெளி வளாகமாக உள்ளது. முறையாக ஆடுவதைக் கூடத்தை பயன்படுத்தவும், கழிவுகளை இயற்கை உரமாக மாற்றவும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.