மேலும் செய்திகள்
ஆயுத பூஜைக்கு திருப்பூர் ஆயத்தம்!
09-Oct-2024
திருப்பூர் : திருப்பூரில் வீடு, தொழிற்சாலைகளில், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.நவராத்திரி விழா, கடந்த 3ம் தேதி கொலு வழிபாட்டுடன் துவங்கியது. கோவில் மற்றும் வீடுகளில், கொலு அமைத்து, தினமும் ஒரு வகை நைவேத்யம் படைத்து, கூட்டு பஜனையுடன் வழிபட்டனர்.ஒன்பதாம் நாளான நேற்று, சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இன்று, விஜயதசமி நாள் பூஜையுடன், கொலு வழிபாடு நிறைவு பெறுகிறது.கோவில் மற்றும் வீடுகளில் சரஸ்வதி பூஜையும், தொழிற்சாலைகள், கடைகளில் ஆயுதபூஜையும் கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர் தங்கள் பாடப்புத்தகங்களை வைத்து வழிபட்டனர். தொழிற்சாலைகளில், பதிவேடுகள் உள்ளிட்ட கோப்புகள் மற்றும் தினசரி பயன்படுத்தும் பொருட்களை வைத்து வழிபட்டனர்.பின்னலாடை தொழிற்சாலைகளில், அனைத்து தொழிலாளர்களும் வந்து, நேற்று அவரவர் இயந்திரங்களைச் சுத்தம் செய்து, விபூதி, சந்தனம், குங்குமம் வைத்தும், மலர்களால் அலங்கரித்தும் வழிபட்டனர்.சுவாமி படங்களை அலங்கரித்து, சுண்டல், சர்க்கரை பொங்கல், பொரி -கடலை, கனி வகைகள், இனிப்பு மிட்டாய் போன்ற வற்றை படைத்து வழிபட்டனர். வீடுகளில், மாவிளக்கு ஏற்றி வைத்து வழி பட்டனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்கள், விநாயகர் வழிபாடு, சரஸ்வதி, லட்சுமி மற்றும் அம்மன் வழிபாடுகள் செய்து, அஷ்டலட்சுமியர் பூஜைகள் நடத்தினர். செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் குமார் துரைசாமி, செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்த், மேழிசெல்வன், ராமு உள்ளிட்டோர் பங்கேற்று வழிபட்டனர்.தென்னிந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் (சைமா) உட்பட, அனைத்து தொழில் அமைப்புகளின் அலுவலகங்களிலும், ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.
09-Oct-2024