பனியன் தொழிற்சங்க கூட்டுக்குழு கலெக்டர் வாயிலாக இன்று மனு
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு அவசர கால நிவாரண உதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பனியன் தொழிற்சங்கக் கூட்டுக்குழு சார்பில், கலெக்டர் வாயிலாக இன்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பிவைக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால், பின்னலாடை ஆர்டர் எடுத்த திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இன்று பரிதவிக்கின்றனர். நுால் கொள்முதல் செய்து, துணியாக மாற்றி, சிலர் உற்பத்தியையும் துவக்கிவிட்டனர். இப்போது வர்த்தகர்கள் ஆர்டர்களை நிறுத்துமாறு கூறுகின்றனர். ஆர்டரை செய்து முடித்து, நஷ்டமடைவ தற்கு பதிலாக, ஆர்டரை நிறுத்திவிடலாம் என்று சிலர் முடிவு செய்தனர். அதிக தொழிலாளரை கொண்ட நிறுவனங்கள், தொழிலாளருக்காக உற்பத்தியை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும், அமெரிக்காவுக்கு மட்டும், 100 சதவீதம் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், உற்பத்தியை சுருக்கிவிட்டன. சில பெரிய நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு, கொரோனா காலம் போல, பணியை குறைத்து வழங்க துவங்கி விட்டன. குறிப்பாக, வெளிமாநில தொழிலாளர்களுக்கும், பணி குறைப்பு துவங்கிவிட்டது. இருப்பினும், ஒருமுறை ஆர்டர் வேறு நாடுகளுக்கு சென்றால், மீண்டும் கைப்பற்றுவது சவாலான விஷயம்; முடிந்தவரை, சமாளித்து பார்க்கலாம் என்ற திடமான நம்பிக்கையுடன் இருக்கின்றனர். தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்திக்க நேரிடும் என்பதால், தொழிற்சங்கங்களும், களத்தில் இறங்கிவிட்டன. அனைத்து பனியன் தொழிற்சங்க கூட்டுக்குழு கூடி, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் முறையிடுவது என தீர்மானித்தன. இன்று கலெக்டர் வாயிலாக, மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையை அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளன. தொழிலாளர் வாழ்வாதாரம்பாதுகாக்கப்பட வேண்டும்ஏற்றுமதி வர்த்தகம் தடைபடாமல் நடக்க வேண்டும். அதிக நஷ்டம் ஏற்பட்டு ஏற்றுமதியாளர் பாதிக்கப்படக்கூடாது; நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அரசு சலுகை திட்டங்களை, அவசரகால நிவாரணமாக அறிவிக்க வேண்டும். தொழிலை பாதுகாத்தால் மட்டுமே, தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். - சேகர்,மாவட்ட பொதுச்செயலாளர்,ஏ.ஐ.டி.யு.சி.,