உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பி.ஏ.பி.,கால்வாய் துார்வாரும் பணி; கண்காணிப்பு குழு ஆய்வு

 பி.ஏ.பி.,கால்வாய் துார்வாரும் பணி; கண்காணிப்பு குழு ஆய்வு

உடுமலை: பி.ஏ.பி., திட்ட கால்வாய்கள் சிறப்பு நிதியின் கீழ் துார்வாரப்படும் பணியை, சிறப்பு கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். பி.ஏ.பி., பாசன திட்டத்தின், இரு மாவட்டங்களிலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் நிலங்களுக்கு நீர் கொண்டு செல்லும், பிரதான கால்வாய், கிளைக்கால்வாய் மற்றும் பகிர்மான கால்வாய்கள் பராமரிப்பின்றி காணப்டுவதால், சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில், கால்வாய்களை துார்வார அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. இதில், திருமூர்த்தி கோட்டத்தில், 44 பணிகளுக்காக ரூ.2.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. துார்வாரும் பணிகளை கண்காணிக்க துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பி.ஏ.பி., முதல் மண்டல பாசனம் விரைவில் துவங்க உள்ள நிலையில், அக்கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உடுமலை கால்வாயிலிருந்து பிரியும், மானுப்பட்டி கிளை கால்வாய்களில் சிறப்பு நிதியின் கீழ் நடந்து வரும் பணிகளை, கண்காணிப்பு அலுவலர் ஆனந்தபாலதண்டபாணி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். திருமூர்த்தி கோட்ட செயற் பொறியாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் பாபு சபரீஸ்வரன் மற்றும் பாசன சங்க தலைவர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி