பரந்த பார்வையை பாரதி விதைத்திருப்பார்
'த மிழ்மொழி போல இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடிய மகாகவி பாரதியார், இன்று இளம் தலைமுறையினர் பேசும் 'தங்கிலீஷ்' கலவைகள் கண்டு கோபத்தால் பொங்கியிருப்பார்; 'வீட்டுக்குள்ளே பெண்ணைப்பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்' என்று பெண் சுதந்திரம் பற்றி பாடியவர், இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டு கொந்தளித்திருப்பார். அவிநாசி, அரசு கலைக்கல்லுாரி, தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் மணிவண்ணன் நம்முடன் பகிர்ந்தவை: பல கோணங்களில் தீர்க்கதரிசியாக சிந்தித்த பாரதியார், இன்று இருந்திருந்தால் ஒரு பெரிய மக்கள் புரட்சிக்கு தலைமை வகித்திருப்பார். 'சிந்து நதி' பாடல் வழியாக பல இடங்களுக்கு செல்வது பற்றி பாடியுள்ளார். 'பெரிதினும் பெரிது கேள்' என்றவர், குறுகிய வட்டத்தில் இருக்காமல் பரந்த பார்வையுடைய எண்ணத்தை அனைவரிடமும் விதைத்திருப்பார். பல மொழிகள் கற்றவர் என்பதால் சிறந்த மொழிபெயர்ப்பாளராக திகழ்ந்திருப்பார். செயலில் இறங்கியிருப்பார் பெண் விடுதலைக்காக பாடிய பாரதி, இன்றைய சமூக சீர்கேடுகள் கண்டு, எழுதியதெல்லாம் இன்னுமே கூட ஈடேறவில்லை. இனி களத்தில் இறங்கலாம் என்று சமூகப்போராளியாக மாறியிருப்பார். செயலில் இறங்க வேண்டும் என்று சென்றிருப்பார். இன்றைய குழந்தைகளிடம் இருக்கும் உணர்ச்சி வசம், தேவையற்ற பயம், சிறிய வட்டத்தில் உலகம் என்ற குறுகிய மனப்பான்மை என அனைத்தையும் உடைத்திருப்பார். தமிழை முதன்மையாக வைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருப்பார். பல்கலை உறுப்பினராக, வருகை பேராசிரியராக, மாணவ சமுதாயத்தை நல்வழிப்படுத்தி, நாளை குறித்த கனவு, திட்டமிடல் என்று தொலைநோக்கு பார்வையை வளர்த்திருப்பார். சமூக மாற்றம் தமிழ் வழியில், சடங்குகளற்ற, எளிய திருமணம் இருந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட வேலியில் வாழும் சமூகத்தின் இயல்பான அடுக்குகளில் மாற்றம் இருந்திருக்கும். இந்தியா ஏன் முன்னேறவில்லை என்ற கருத்துக்கு இங்கு அரசியல்வாதிகள் அதிகம், தலைவர்கள் குறைவு என்பர். அரசியல்வாதி தனக்காக வாழ்பவர், தலைவர் பிறருக்காக வாழ்பவர். அந்த தலைமை இடத்தில் பாரதி முன்னிலையில் இருப்பார். - இன்று (டிச. 11) மகாகவி பாரதியார் பிறந்த தினம்