வெளுத்து வாங்கிய மழை; மகிழ்ச்சியில் விவசாயிகள்
பொங்கலுார் : புரட்டாசி மாதத்தில் ஓரிரு முறை மழை பெய்வது வழக்கம். இதைப் பயன்படுத்தி விவசாயிகள் சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வர்.கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தால் காய்கறி சாகுபடியில் கவனம் செலுத்துவர். ஐப்பசி மாதத்தில் தான் பருவமழை தீவிரமடையும். ஆனால், இந்த ஆண்டு நம் மாவட்டத்தில் புரட்டாசி மாதத்திலேயே மழை கொட்டி தீர்த்துள்ளது. ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. நீர் வரத்து அதிகரிப்பு
மழை குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் பெய்யாமல் பரவலாக பெய்துள்ளது. தொடர் மழை பெய்து வருவதால் குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. சிறிய அளவிலான குட்டைகள் நிரம்பி வருகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இனி பருவமழை தீவிரம் அடையும் பட்சத்தில் பெரிய குளங்கள், ஏரிகள் நிரம்பி பல ஆண்டுகளுக்குப் பின் உபரி நீர் வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பரப்பு அதிகரிக்கும்
தண்ணீர் பற்றாக்குறையால் பயிர் சாகுபடியை குறைத்து இருந்த விவசாயிகளுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாட்களில் காய்கறி சாகுபடி தீவிரமடையும். போதுமான தண்ணீர் இருப்பதால் ஓராண்டு பயிர்களான வாழை, மஞ்சள், சேனை, மரவள்ளி போன்ற பயிர்கள் சாகுபடி அதிகரிக்கும். விவசாயிகள் உற்சாகம்
தென்னை விவசாயிகள் பெரும் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். அடுத்த ஓர் ஆண்டுக்கு தண்ணீர் பிரச்னை இல்லை. தேங்காயும் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது. தென்னையை பேரழிவிலிருந்து காப்பாற்றிய வருண பகவானுக்கு தென்னை விவசாயிகள் மனமார நன்றி தெரிவித்து பிரார்த்தனை செய்கின்றனர்.